< Back
இளைஞர் மலர்
வாழ்க்கையை மேம்படுத்தும் ஹோம் சயின்ஸ் படிப்பு..!
இளைஞர் மலர்

வாழ்க்கையை மேம்படுத்தும் ஹோம் சயின்ஸ் படிப்பு..!

தினத்தந்தி
|
5 Aug 2023 5:24 PM IST

ஹோம் சயின்ஸ் என்பது வீட்டு அறிவியல் என்று எளிமையாக கூறப்பட்டாலும் அது ஒரு அறிவியல் மட்டுமல்ல ஒரு கலையும் கூட. நம்மில் பெரும்பாலானவர்கள் ஹோம் சயின்ஸ் என்பது வெறும் சமையல், சலவை, தையல் வேலை என்று மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால், இது இயற்பியல், உயிரியல், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அறிவை பயன்படுத்தும் இடைநிலை ஆய்வுத்துறை ஆகும்.

இந்தப் படிப்பு நவீன வீட்டு பராமரிப்புடன் மாணவர்களை தொடர்பு படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகளில் பயன்படுத்தப்படும் அறிவியல் கோட்பாடுகள் (சூடு, குளிர்ச்சி, ஊட்டச்சத்து, பாதுகாத்தல் போன்றவை) குறித்த அறிவை வழங்குவதால் இதனை ஒரு அறிவியல் சார்ந்த படிப்பு என்று சொல்லலாம்.

சிறந்த வாழ்க்கைக்கான கல்வி என்று கூறப்படும் இந்த வீட்டு அறிவியலின் அடிப்படை குடும்ப அமைப்பாகும். இயற்கையாக அமைந்திருக்கும் குடும்பத்திற்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை கையாள்வதற்கு இந்தப் படிப்பு பெருமளவில் உதவி செய்கின்றது.

இல்லற வாழ்வு, குடும்ப வாழ்க்கை, அறிவார்ந்த சிந்தனை மற்றும் இந்த வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, வீட்டையும் குடும்பத்தையும் சமூகக் கட்டமைப்பின் பயனுள்ள பகுதிகளாக மாற்றி, வாழ்க்கையை மிகவும் அழகாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு நவீன அறிவியல் என்று ஹோம் சயின்ஸ் படிப்பைக் கூறலாம்.

* அடிப்படை தகுதி

இளங்கலை பட்டப்படிப்பை படிப்பதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில கல்வி நிறுவனங்களில் இந்த இளங்கலை பட்டப் படிப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பில் எந்த பாடத்திட்டத்தை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் சேர்க்கை அனுமதிக்கப்படுகின்றது. இந்தப் பட்டப் படிப்பின் முதல் வருடத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலின் அடிப்படைகளை கற்க வேண்டி இருப்பதால் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இத்துறை படிப்பிற்கான சேர்க்கையை அனுமதிக்கிறார்கள்.

* கல்லூரிகள்

சண்டிகர், புனே, உதய்பூர், தார்வாட், பங்கா, புது டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஹோம் சயின்ஸ் படிப்புகளை சிறப்பாக வழங்கி வருகிறார்கள்.

* பி.எஸ்சி ஹோம் சயின்ஸ்

பி.எஸ்சி. ஹோம் சயின்ஸ், இது 3 ஆண்டு கால தொழில்முறை பட்டப்படிப்பாகும். ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி அளவீடுகள் போன்ற அறிவியலின் பல்வேறு துறைகளை இந்தப் படிப்பு உள்ளடக்கி இருக்கின்றது. சுற்றுப்புறம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பல்வேறு அறிவியல் சிக்கல்களை கையாள்வதும் இதில் அடங்கும். இந்த இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் மேற்கொண்டு படிக்க விரும்பினால் ஊட்டச்சத்து, உடை, குடும்ப உறவுகள், வீட்டு மேலாண்மை, குழந்தை மேம்பாடு போன்ற சிறப்பு பிரிவுகளில் உயர்கல்வியைத் தொடரலாம்.

* பி.ஏ. ஹோம் சயின்ஸ்

இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த மூன்று ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பானது மிகவும் சிறப்பாக வழங்கப்படுகின்றது. பல்வேறு வளங்களை திறம்பட நிர்வகிப்பதில் இந்தப் பாடநெறி கவனம் செலுத்துகிறது. ஒருவரது வீட்டு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அறிவுசார் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கான அறிவியலும் இதில் அடங்கும். இத்துறை பட்டதாரிகளுக்கு ஆடை விற்பனை, உணவு விடுதிகள், சமூக நல நிறுவனங்கள் போன்ற துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பட்டப் படிப்பில் மாணவர்களுக்கு கோட்பாடு, நடைமுறைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

* டிப்ளமோ

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ ஹோம் சயின்ஸ் மற்றும் பி.ஜி. டிப்ளமோ ஹோம் சயின்ஸ் ஆகிய படிப்பில் இணைந்து படிக்க முடியும்.

* உயர்படிப்பு

பி.எஸ்சி ஹோம் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான இளங்கலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முடித்தவர்கள், எம்.எஸ்சி ஹோம் சயின்ஸ் என்ற முதுகலை பட்டப் படிப்பிலும் இணைந்து படிக்க முடியும்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

ஹோம் சயின்ஸ் படிப்புகள் பொது மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. மாநில அரசுத்துறைகளில் பல்வேறு வேலைகளில் இத்துறை பட்டதாரிகள் பணி அமர்த்தப்படுகிறார்கள். உணவு நிபுணராக இருக்கும் இத்துறை பட்டதாரிகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் மிகப்பெரிய அங்கீகாரம் உள்ளது. இந்தத் துறை பரந்த அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறது.

கற்பித்தல், உணவுத்தொழில், சுகாதார பாதுகாப்பு துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் இத்துறை பட்டதாரிகள் பணியாற்ற முடியும். உற்பத்தித் தொழிற்சாலைகள், சுற்றுலா மற்றும் சேவை நிறுவனங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து, ஜவுளித் தொழில் மற்றும் ஆடை நிறுவனங்கள், மனித வள மேலாண்மை, சுய வேலைவாய்ப்பு என பலவிதமான வேலை வாய்ப்புகளை ஹோம் சயின்ஸ் பட்டதாரிகள் பெற முடியும்.

ஆடைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி மேலாளர்கள், வண்ண ஆலோசகர்கள், உணவு ஆலோசகர்கள், பேஷன் டிசைனிங், உட்புற வடிவமைப்பாளர்கள், ஆசிரியர்கள் போன்ற பதவிகளிலும் பணியாற்ற முடியும்.

மேலும் செய்திகள்