ஏ.ஐ.தொழில்நுட்பம் வரமா, இல்லை சாபமா..?
|ஏ.ஐ.தொழில்நுட்பம், சமீப காலமாக எல்லோரையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. போட்டோக்கள், வீடியோக்களை 'எடிட்' செய்ய, ஏராளமான ஏ.ஐ., செயலிகள் இலவசமாக கிடைப்பதால், கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களில் உலா வரும் போட்டோக்கள், வீடியோக்களில் எது உண்மை என கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வாயிலாக, மாணவர்கள் தங்களது 'புராஜக்ட் ரிப்போர்ட்' மற்றும் வீட்டு பாடங்களை சமர்ப்பிக்க தொடங்கியுள்ளதால், அதற்கு உலகின் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இப்படி அனைத்து துறைகளிலும் ஏ.ஐ., பயன்பாடு அதிகரித்துள்ளதால், வேலைவாய்ப்புகள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏ.ஐ., தொடர்பான ஆராய்ச்சியில் முன்னோடியான ஜெப்ரி ஹிண்டன், ''ஏ.ஐ., என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டம். எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும், அதை தவறாக பயன்படுத்துபவர்கள் இருக்கத் தான் செய்வர். அதனால், ஏ.ஐ., பற்றிய அச்சம் தேவையில்லை. ஏற்கனவே உள்ள தொழில்நுட்பத்தை விட, ஏ.ஐ., பயன்படுத்தி போட்டோக்களை துல்லியமாக 'எடிட்' செய்ய முடியும். வீடியோக்களில் ஒருவரின் குரலை உண்மையாக பேசுவது போல செய்ய முடியும். ஆனால், ஒரு அரசியல் தலைவர் போல போலி உருவத்தை உருவாக்கி, பேச வைப்பது, நடிக்க வைப்பதெல்லாம் எளிதானது அல்ல. அதற்கு ஒரு சினிமா எடுப்பதுபோல, பெரும் பணம் தேவை. ஏ.ஐ., பயன்படுத்தி போலி வீடியோ, ஆடியோ, போட்டோக்களை கண்டறியவும் முடியும். அதற்கான ஆய்வகங்களும் வரத் தொடங்கி விட்டன. போலிகளை உருவாக்க மட்டுமல்ல; போலிகளை, கண்டறியவும் ஏ.ஐ., பயன்படுகிறது'' என்று நம்பிக்கை கொடுக்கும் ஜெப்ரி, ஏ.ஐ. தொழில் நுட்பத்தை மிக ஜாக்கிரதையாகக் கையாள சொல்கிறார்.
ஏ.ஐ., என்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டம். எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும், அதை தவறாக பயன்படுத்துபவர்கள் இருக்கத் தான் செய்வர். அதனால், ஏ.ஐ., பற்றிய அச்சம் தேவையில்லை