ஓட்டப்பந்தயத்தில் சாதனைகளை படைக்கும் 'இளம்புயல்'
|ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவிலான சாதனைகளையும் படைத்து வருகிறார் +2 படிக்கும் அபிநயா
பிளஸ்-2 படிக்கும் அபிநயா, ஓட்டப்பந்தயத்தில் அசத்தி வருகிறார். கடந்த 3 வருடங்களில், பல்வேறு போட்டிகளை வென்று, நிறைய தங்க பதக்கங்களை வசப்படுத்தி இருப்பதுடன், தேசிய அளவிலான சாதனைகளையும் படைத்திருக்கிறார். மின்னல் வேக மங்கையாக தடகளத்தில் சாதித்து வரும் அபிநயாவுடன் சிறு நேர்காணல்...
* உங்களை பற்றி கூறுங்கள்?
தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமம்தான் எங்கள் சொந்த ஊர். இப்போது திருநெல்வேலியில் தங்கியிருந்து பிளஸ்-2 படிப்பதோடு, ஓட்டப்பயிற்சி பெறுகிறேன்.
* ஓட்டப்பந்தயத்தின் மீது ஈர்ப்பு வந்தது எப்படி?
ஓட்டப்பந்தயத்தின் மீது எல்லோருக்குமே ஈர்ப்பு இருக்கும். ஆனால் அந்த ஈர்ப்பை உணர்ந்து, அதில் ஈடுபாடு காட்டியவர்கள் மட்டுமே, ஓட்டப்பந்தய வீரர்-வீராங்கனையாக மாறுகிறார்கள். எல்லோரை போலவும், எனக்கும் ஓட்டப்பந்தயத்தின் மீது ஈர்ப்பு அதிகம். அதை 6-ம் வகுப்பில் உணர ஆரம்பித்தேன். 7-ம் வகுப்பில் இருந்து, ஓட்டப்பந்தய களத்தில் பயிற்சி பெற தொடங்கி, 9-ம் வகுப்பில் போட்டிகளில் பதக்கம் வெல்ல ஆரம்பித்தேன்.
* ஓட்டப்பந்தய விளையாட்டில், எப்போது தீவிரமாக பயிற்சி எடுக்க ஆரம்பித்தீர்கள்?
7-ம் வகுப்பு வரை, ஓட்டப்பந்தயம் என்பது என்னை மகிழ்விக்கும் விளையாட்டாகவே இருந்தது. அதற்கு பிறகுதான், அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன்.
* இயல்பான ஓட்டத்திறனை எப்படி மேம்படுத்திக் கொண்டீர்கள்?
எல்லோருக்குமே ஓட்டத்திறனும், சிறப்பாக ஓடக்கூடிய சக்தியும் இருக்கும். ஆனால், ஓட்டப்பந்தய போட்டி என்று வந்துவிட்டால், நம்முடன் களத்தில் ஓடும் மற்ற போட்டியாளர்களை தோற்கடிக்கக்கூடிய அசாத்திய திறன் நமக்கு இருக்க வேண்டும். அதற்காக நிச்சயம் பயிற்சி பெற வேண்டும். நானும் பயிற்சி பெற்றேன்.
ஆரம்பத்தில் ஒரு அகாடமியில் ஓட்டப்பயிற்சி பெற்றாலும், அந்த சமயத்தில் என்னால் பிரகாசிக்க முடியவில்லை. அதனால் 9-ம் வகுப்பிற்கு பிறகு, திருநெல்வேலியில் இருக்கும் பால்கன் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற தொடங்கினேன். அங்கிருக்கும், ரொசிட்டோ சாக்ஸ் மற்றும் கவுதம் ஆகியோர் என்னை சிறப்பாக பயிற்றுவித்தனர். ஓட்டப்பயிற்சியில் சில மாற்றங்களை முன்னெடுத்து, என்னுடைய ஓட்டத்திறனை மேம்படுத்தினர். அவர்களிடம் பயிற்சி பெற தொடங்கிய, ஒருசில மாதங்களிலேயே மாநில அளவில் வெற்றி பெற தொடங்கிவிட்டேன்.
* உங்களது முதல் வெற்றி பற்றி கூறுங்கள்?
2020-ம் ஆண்டு, திண்டுக்கல் பகுதியில் ஜூனியர் மாநில தடகள போட்டிகள் நடந்தன. அதில், நான் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொண்டு, இலக்கை 12.72 வினாடிகளில் எட்டி தங்கப்பதக்கம் வென்றேன். இதற்கு முன்பாக, பல போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், இதுவே குறிப்பிடத்தகுந்த முதல் வெற்றி.
* வேறு எந்தெந்த போட்டிகளில் கலந்து கொண்டு வென்றிருக்கிறீர்கள்?
கொரோனா ஊரடங்கு காலத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் மற்றொரு ஜூனியர் மாநில போட்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அதிலும் நான் 100 மீட்டர் பந்தய பிரிவில் கலந்து கொண்டு ஓடினேன். கடந்த முறை 12.72 வினாடிகள் ஓடி கடந்த இலக்கை, இம்முறை 12.30 வினாடிகளிலேயே எட்டிப்பிடித்ததோடு, தங்கப்பதக்கத்துடன் புதிய சாதனையும் படைத்தேன். அதற்கு முன்பாக, 100 மீட்டர் இலக்கை, 12.40 வினாடிகளில் ஓடி கடந்ததே மாநில சாதனையாக இருந்த நிலையில், என்னுடையது புதிய சாதனையாக பதிவானது.
இதற்கு பிறகு திருவண்ணாமலையில் நடந்த மற்றொரு ஜூனியர் மாநில போட்டிகளில், 100 மீட்டர் இலக்கை வெறும் 12.29 வினாடிகள் துரத்திப்பிடித்து தங்கம் வென்றேன். இந்த வாய்ப்பின் மூலம், என்னுடைய பழைய சாதனையை (12.30 வினாடி) நானே மீண்டும் திருத்தி எழுதினேன். அடுத்ததாக, குண்டூர் பகுதியில் நடந்த தென் மண்டல போட்டிகளிலும் தங்கம் வென்றேன். அசாமில் நடந்த ஜூனியர் தேசிய போட்டியில், 100 மீட்டர் தொலைவை 12.26 வினாடிகளில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றேன். அதைத்தொடர்ந்து நடந்த, மாநில இளையோர் போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தினேன்.
உடுப்பியில் நடைபெற்ற ஜூனியர் தேசிய போட்டியில் நூலிழையில் முதல் பரிசை தவறவிட்டு, 2-ம் பரிசாக வெள்ளிப்பதக்கம் வென்றேன்.
* மாநில, தேசிய போட்டிகளை தொடர்ந்து, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறீர்களா?
ஆம்...! உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில், 100 மீட்டர் பிரிவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு ஓடினேன். அந்த போட்டியில், 11.82 வினாடிகளில் இலக்கை நெருங்கினாலும், வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த போட்டியில் வென்றதனால், தென் கொரியாவில் நடந்த 20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய ஜூனியர் தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஏராளமான சர்வதேச வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதிலும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக ஓடினேன். இருப்பினும், 4-ம் இடமே கிடைத்தது. தனிநபர் ஓட்டத்தில் சாதிக்க முடியாவிட்டாலும், 4 பேர் ஓடக்கூடிய 'ரிலே' தொடர் ஓட்டத்தில், இந்தியாவிற்காக ஓடி வெண்கலம் வென்றோம். இந்த 'ரிலே' ஓட்டத்தில், 4-வது வீராங்கனையாக ஓடி, இலக்கை எட்டினேன்.
* ஓட்டப்பந்தயத்தில் நிறைய வெற்றிகளை பதிவு செய்திருக்கிறீர்கள். இதில் மறக்க முடியாதது எது?
அசாமில் நடைபெற்ற ஜூனியர் தேசிய போட்டிகள், எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். ஏனெனில் 100 மீட்டர் பந்தய தொடக்கத்தின்போது, கடைசி ஆளாக ஓட ஆரம்பித்து, இறுதியில் முதல் பரிசு வென்றேன். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறியதால், இலக்கை எட்டிப்பிடிப்பது சவாலானதாக தோன்றியது. ஒருகட்டத்தில் வெற்றி பெற முடியாது என்றுதான் நினைத்தேன். இருந்தாலும், சுதாரித்து ஓடி முதல் பரிசு பெற்றேன். ஆரம்பத்தில் தடுமாறாமல் இருந்திருந்தால், அந்த போட்டியில் தேசிய அளவிலான சாதனைகளும் படைக்கப்பட்டிருக்கும்.
* உங்களுடைய முயற்சிக்கு, பெற்றோர்-பயிற்சியாளர்கள் உறுதுணையாக இருக்கிறார்களா?
ஆம்...! என்னுடைய பயிற்சிக்காகவே, பெற்றோர் சொந்த ஊரில் இருந்து நெல்லைக்கு இடம்மாறி இருக்கிறார்கள். மேலும் அவர்களது சக்திக்கு மீறி, எனக்காக செலவு செய்கிறார்கள். பெற்றோரை போலவே, பயிற்சியாளர்களும் என்னை சிறப்பாக ஊக்குவிக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
* உங்களுடைய ஆசை என்ன?
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதே, என்னுடைய ஆசை. அதற்காகவே கடினமாக பயிற்சி பெறுகிறேன். ஒலிம்பிக் போட்டிகளை எதிர்நோக்கி, நிறைய சர்வதேச போட்டிகளில் ஓடவும், நிறைய பதக்கங்கள் வெல்லவும் ஆவலாக இருக்கிறேன்.