< Back
இளைஞர் மலர்
டிரோன் உரிமம் பெறுவது எப்படி..?
இளைஞர் மலர்

டிரோன் உரிமம் பெறுவது எப்படி..?

தினத்தந்தி
|
30 April 2023 6:32 PM IST

கடந்த வாரம் டிரோன்களின் அடிப்படையை தெரிந்து கொண்டோம். இந்த வாரம், டிரோன்களை இயக்க உரிமம் பெறுவதை பற்றியும், அதற்கான கல்வி புகட்டும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

* உரிமம் பெறுவது எப்படி?

மத்திய-மாநில அரசுகள் இணைந்து டிரோன் பைலட் மற்றும் டிரோன் பைலட் டிரெயினர் பயிற்சிகளை வகுப்பு வாரியாக சிலருக்கு இலவசமாகவும், சிலருக்கு குறிப்பிட்ட தொகை பெற்றும் கற்றுக்கொடுக்கிறது. டெல்லி, மைசூரு, சென்னை (ஐ.ஐ.டி.), மதுரை, கோவை... என நிறைய இடங்களில், டிரோன் பைலட் பயிற்சிகளுடன் கூடிய லைசென்ஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. டிரோன் பைலட் என்பது மட்டுமின்றி, டிரோன்களை முன்னிறுத்தி நிறைய பாடத்திட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

* யாரெல்லாம் உரிமம் பெற முடியும்..?

நீங்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர, 10-வது தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் டி.ஜி.சி.ஏ.வில் (DGCA) குறிப்பிடப்பட்ட மருத்துவப் பரிசோதனையையும், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்தின் பின்னணிச் சோதனையையும் முடிக்க வேண்டும். இவை அனைத்தையும் முடித்துவிட்டால், டிரோன் இயக்கும் உரிமம் பெறலாம்.

* கூடுதல் திறமைகள்

அடிப்படைத் தேவை 10-ம் வகுப்பு தேர்ச்சி தான் என்றாலும், விமானம், வானிலை, காற்றின் வேகம் மற்றும் பிற இயக்கவியல் போன்ற பறக்கும் அடிப்படைகளை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

டிரோன் செயல்பாடுகள் பல்வேறு துறைகளில் வேகமாக விரிவடைந்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு துறைக்கும் அதன் குறிப்பிட்ட தேவைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, திரைப்படத் தயாரிப்பு, புவி உணர்தல், கட்டுமானம், சுரங்கம், ரியல் எஸ்டேட், விவசாயம், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் டிரோன் பைலட்டுகளுக்கு தேவை உள்ளது. எனவே, வெற்றிகரமான ட்ரோன் ஆபரேட்டராக மாற, தொடர்புடைய துறையின் ஆழமான அறிவு தேவை.

* டிரோன் தனித்துவ எண்

பாதுகாப்பு காரணத்திற்காக டிரோன்களில் (Unique Identification Numbers (UIN) என்கிற பிரத்யேக எண்கள் பொறிக்கப்படும். இந்த எண்ணை வைத்துக்கொண்டு, உங்களது டிரோன் எங்கு பறந்துகொண்டிருக்கிறது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் பறந்துகொண்டிருக்கிறதா என மத்திய, மாநில பாதுகாப்புத் துறையினரால் கண்காணிக்க முடியும். தற்போது வரக்கூடிய டிரோன்களில் இந்த எண் இருக்கும். சிலவற்றில் இருக்காது. இதைப் பெற ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் உங்களது டிரோனிற்கு யூ.ஐ.என். நம்பர் கிடைக்கும்.

* டிரோன் பைலட் பயிற்றுனர்

டிரோன் இயக்க பழகுவது மட்டுமல்ல, டிரோன் இயக்க மற்றவர்களுக்கும் நீங்கள் கற்றுக்கொடுக்கலாம். இதற்கு முன்பாக, டிரோன் பைலட் பயிற்றுனர் பயிற்சி மற்றும் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திரா காந்தி ராஷ்ட்ரிய ஊரான் அகாடமி, அரசு விமானப் பயிற்சி நிறுவனம், பாம்பே ப்ளையிங் கிளப், ரெட்பேர்ட் ஏவியேஷன்... ஆகியவை இதற்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இங்கு டிரோன் இயக்கவும் பயிற்சி பெறலாம். டிரோன் பைலட் பயிற்றுனர் பயிற்சியும் பெறலாம். புத்தக பாடம், செயல்முறை பாடம் என 5 நாட்களில் தொடங்கி பாடப்பிரிவுகள் மற்றும் பயிற்சி திட்டங்களுக்கு ஏற்ப 30 நாட்கள் வரை வகுப்புகள் இருக்கும்.

* டிரோன்களை எங்கு பறக்கவிடக் கூடாது?

டிரோன்களை குறிப்பிட்ட சில இடங்களில் பறக்க விடக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையத்திலிருந்து 7 கிலோ மீட்டருக்குள் டிரோன்களை பறக்கவிடக் கூடாது. காவல்துறை சார்ந்த இடங்களில் டிரோன்களைப் பறக்கவிடக் கூடாது. சிறைச்சாலைகள், அரசு கட்டிடங்களுக்கு மேலே டிரோன்களைப் பறக்கவிடக் கூடாது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன் அனுமதியின்றி டிரோன்களை பறக்கவிடக் கூடாது.

* டிரோன்களைப் பறக்கவிடுவதற்கு முன்பு கவனிக்க வேண்டியது என்னென்ன?

காற்று அதிகமாக அடிக்கும்போது பெரும்பாலும் டிரோனைப் பறக்கவிடக் கூடாது. மரங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் டிரோன்களை தாழ்வாகப் பறக்கவிடுவதை தவிர்க்க வேண்டும். பறவைகள் அதிகமாக இருக்கும்போது டிரோன் பறக்க விடுவதைத் தவிர்க்கலாம். கழுகு, பருந்து போன்றவை டிரோன்களை தாக்கும் வாய்ப்பு அதிகம். மின்கம்பிகள் இருக்கும் இடங்களில் டிரோன்களைப் பறக்கவிடக் கூடாது. மின்காந்த அலைகளால், டிரோன்கள் பாதிக்கப்படும். டிரோனைப் பறக்கவிடும்போது செட்டிங்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இரண்டு முறை பார்க்கவேண்டும். பேட்டரி 30% கீழ் வரும்பட்சத்தில் உடனே பேட்டரி மாற்றிவிட வேண்டும். டிரோனைப் பறக்கவிடும்போது அதைக் கையாள எப்போதும் இருவர் இருப்பது நல்லது. ஒருவர் டிரோனை இயக்கினால், மற்றொருவர் அதைக் கண்காணிக்க முடியும். எப்பவும் நமது கண் பார்வையில்தான் டிரோனை இயக்க வேண்டும்.

கட்டணம்

பாடத்தின் வகையைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். படிப்புக் கட்டணம் ரூ.30,000 முதல் தொடங்கி, படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தைப் பொறுத்து ரூ. 1 லட்சம் வரை உயரலாம்.

மேலும் செய்திகள்