< Back
இளைஞர் மலர்
ஏப்ரல் மாதத்தில் இருந்து வருமான வரி தாக்கலில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?
இளைஞர் மலர்

ஏப்ரல் மாதத்தில் இருந்து வருமான வரி தாக்கலில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

தினத்தந்தி
|
2 April 2023 8:39 AM GMT

புதிய வருமான வரி கொள்கையின்படி, இன்சூரன்ஸ் முதிர்வு தொகை ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அதற்கும் வருமான வரி செலுத்த வேண்டும்.

பொதுவாக வருமான வரி தாக்கலின்போது, புதிய வரி கொள்கை பழைய வரி கொள்கை இவ்விரண்டில் எதை தேர்வு செய்து தாக்கல் செய்ய போகிறீர்கள்...? என்ற கேள்வி முன்வைக்கப்படும். ஆனால் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ஆப்ஷனை எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும், புதிய வரி கொள்கை முறையே, 'டிபால்ட்' முறையில் பின்பற்றப்படும். நீங்கள்தான், உங்களுக்கு எது பொருத்தமாக இருக்குமோ, அதை தேர்வு செய்ய வேண்டும்.

இன்சூரன்ஸில் ரூ.5 லட்சத்திற்கு மேல்...

புதிய வருமான வரி கொள்கையின்படி, இன்சூரன்ஸ் முதிர்வு தொகை ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அதற்கும் வருமான வரி செலுத்த வேண்டும். புதிய வரி கொள்கையின் படி இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் அபராதம் விதிக்கப்படும்..?

நீங்கள் செய்யும் ஒருசில தவறுகள், வருமான வரி தாக்கலின் போது, தேவையில்லாத அபராதங்களை உருவாக்கக்கூடும். குறிப்பாக, வருமானத்தை குறைத்தும், மறைத்தும் தாக்கல் செய்திருந்தால், சட்டப்பிரிவு 270-ஏ படி, வருமான வரியில் இருந்து 50 சதவிகிதத்தில் தொடங்கி, அதிகபட்சமாக 200 சதவிகிதம் வரை அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கீழ்கண்ட காரணங்களால் அபராதம் விதிக்கப்படலாம்.

1. நடந்த நிகழ்வுகளை மறைப்பது/ உண்மைகளை மறைத்தல்

2. முதலீட்டை மறைப்பது

3. செலவினங்களை அதிகமாக கணக்கு காட்டுவது/ போலியான செலவினங்களை உருவாக்குவது

4. வங்கி கணக்கில் வந்த பணப்பரிவர்த்தனையை வராதது போல சித்தரிப்பது, வராத செலவினங்களை வந்ததுபோல காட்டுவது

5. முதலீடு அல்லது சேமிப்பு ரீதியில் உங்களுக்கு வந்திருக்கும் சர்வதேச பண பரிவர்த்தனைகளை மறைப்பது

இவை அனைத்தும், அபராதத்திற்குரிய செயல்களாக கருதப்படும்.

-மேக்ஸிடோம் சுப்பிரமணி, சென்னை.

தாமதமான வருமான வரி ரிட்டன் தாக்கல்

வருமான வரிக்கான ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள், வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ரூ. 5 ஆயிரம் அபராதம் கட்டியும், ரூ. 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியும் ரிட்டன் தாக்கல் செய்யலாம். அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்டி தாக்கல் செய்ய வேண்டும்.

மார்ச் 31-ந் தேதிக்குள் செய்ய வேண்டியவை...

வரி சலுகை : வரி சேமிப்பு முதலீடுகள் பொதுவாக ஒரு நிதியாண்டில் நீங்கள் செய்த நிதி பரிவர்த்தனைகளை கொடுத்து வருமான வரி தாக்கல் என்பதை செய்வோம். ஆக அந்த வருமான வரிதாக்கலில் சில வரி சலுகைகளும் இருக்கும். குறிப்பாக செய்யும் முதலீடுகள், இன்சூரன்ஸ் பிரிமீயம், டிராவல் அலவன்ஸ் போன்ற பலவற்றிற்கும் வரி சலுகை என்பது கிடைக்கும். குறிப்பாக 80-சி பிரிவின் கீழ் வரி சலுகை என்பது கிடைக்கும். அஞ்சலகத்தின் பல திட்டங்கள், இ.எல்.எஸ்.எஸ் என பலவும் இதில் சலுகைகளை வழங்குகின்றன. ஆக இதனை பெறவேண்டுமெனில் நீங்கள் மார்ச் 31-க்குள் முதலீடு செய்திருக்க வேண்டும்.

திருத்தம் : கடந்த 2021-22-ம் நிதியாண்டுக்கான தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசமும் மார்ச் 31, 2023 அன்று முடிவடைய உள்ளது. அதேபோல ஏதேனும் காரணங்களுக்காக சில விவரங்கள் வருமான வரி தாக்கலில் விட்டு போயிருந்தாலும் கூட அதனை மார்ச் இறுதிக்குள் செய்து கொள்ளலாம்.

சிறப்பு திட்டம் : எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, இந்திய வங்கி, பஞ்சாப்&சிந்த் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளும் பல சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. இந்த திட்டங்கள் பலவும் மார்ச் 31, 2023-ல் முடிய உள்ளன. குறிப்பாக எஸ்.பி.ஐ.-யின் அம்ரித் கலாஷ் டெபாசிட் எப்டி திட்டம், ஹெச்.டி.எப்.சி வங்கியின் சீனியர் சிட்டிசன் கேர் எப்டி, இந்தியன் வங்கியின் இண்ட் சக்தி 555 நாள் எப்டி திட்டம், ஐ.டி.பி.ஐ. வங்கியின் நமான் சீனியர் சிட்டிசன் டெபாசிட் திட்டம், பஞ்சாப் & சிந்த் வங்கியின் ஸ்பெஷல் எப்டி திட்டம் என பலவும் முடிவடையவுள்ளன.

கே.ஒய்.சி : ரிசர்வ் வங்கி அறிவித்த கே.ஒய்.சி அப்டேட் என்பது மார்ச் 31, 2023-க்குள் செய்யப்பட வேண்டும். ஆக அதற்குள் அப்டேட் செய்யாதவர்கள் இதனை அப்டேட் செய்து கொள்ளவேண்டும்.

கவனம் தேவை

பிக்சட் டெபாசிட், போஸ்ட் ஆபீஸ் முதலீடுகள், சேமிப்பு வங்கி கணக்கு மூலமாக வரும் வட்டி, கிஷான் சேமிப்பு திட்டங்கள், சவரன் கோல்ட் பாண்ட், கடன் பத்திரங்கள் மூலமாக கிடைக்கும் லாபம்... ஆகியவற்றையும் ரிட்டன் தாக்கலின் போது கணக்கில் கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்