முதுகுவலியை விரட்டும் உணவுகள்...!
|ஐ.டி.துறையில் வேலை செய்யும் பலர், இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதுடன் முதுகுவலியையும் உணர்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது. மேலும் இயல்பான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம். இதோ அதற்கான சில வழிகாட்டுதல்கள்...
பால் பொருட்கள் : கால்சியம் குறைபாடு எலும்பு வலி, தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உயிரணுக்களுக்கு எரிபொருளாக உதவுவதோடு, முதுகுவலிக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படும். எனவே பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை, அன்றாட உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.
புரதம் நிறைந்த உணவு : தினை, உளுத்தம் பருப்பு, பீன்ஸ், எள் போன்றவை புரதச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. அவை முதுகுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த திசுக்களை சரிசெய்து விரைவாக குணமடைய உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது.
பழங்கள் : புளூபெர்ரி, அன்னாசி மற்றும் திராட்சை போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட பழங்கள் உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஏனெனில் அவை வலி நிவாரணியாகவும், முதுகுவலியை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் எல்லாவற்றையும் போலவே, அளவோடு சாப்பிடும்போது பலன் அதிகபட்சமாக இருக்கும்.
மூலிகைகள் : இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இலவங்கப்பட்டை, துளசி போன்றவற்றிலும் உள்ளது. நாம் பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களான மஞ்சள் போன்றவை வலியைக் குறைத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அவற்றை மிதமாக உட்கொள்வது அவசியம்.
பச்சை காய்கறிகள் : வைட்டமின்-சி மற்றும் பி-12 நிறைந்த சில காய்கறிகளான கத்தரிக்காய், முருங்கைக்காய், கீரை, புரோக்கோலி போன்றவற்றால் முதுகெலும்பு வலுப்பெறுகின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் சேதமடைந்த செல்களை சீரமைக்கவும் உதவும்.