டிஜிட்டல் உலகை ஆட்சி செய்யும், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பு
|இன்றைய சூழலில் கணினி, செல்போன்கள், டி.வி, ப்ரிட்ஜில் தொடங்கி எலக்ட்ரானிக் சாதனங்கள் நம் அன்றாட மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதவையாக மாறிவிட்டன. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் ஸ்மார்ட் எலக்ட்ரானிக் சாதனங்களும் புதிது புதிதாகச் சந்தைக்கு வந்தபடி உள்ளன. அதனால் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியமாகிப்போன எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பற்றிய பொறியியல் படிப்புகளும் (Electronics and Communication Engineering) முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பொறியியல் துறைகளில் இப்படிப்பிற்கென தனித்தன்மை உண்டு. உற்பத்தி சார்ந்த நிறுவனங்களிலும், ஐ.டி. போன்ற மென்பொருள் நிறுவனங்களிலும் இப்படிப்பிற்கான வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
* கல்வித் தகுதி
இரண்டு முறைகளில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறைகளில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை மேற்கொள்ளலாம். பத்தாம் வகுப்பு முடித்து மூன்று வருட டிப்ளமோ படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். டிப்ளமோவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் லேட்ரல் என்ட்ரி (Lateral Entry) முறையில் மூன்று வருட பி.இ. இ.சி.இ. (B.E E.C.E) பொறியியல் படிப்பைப் படிக்கலாம். அல்லது பிளஸ் டூ முடித்து நேரடியாக நான்கு வருடப் பொறியியல் படிப்புகளைப் படிக்கலாம். பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது பொறியியல் படிப்பிற்கான அடிப்படைக் கல்வித் தகுதியாகக் கருதப்படுகிறது.
* வேலைவாய்ப்பு
எலக்ட்ரானிக்ஸ் துறையில் பெருகும் வேலைவாய்ப்புகள், சம்பள விகிதம் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி என முன்னணியில் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சிதான் இந்த துறையின் மாபெரும் வளர்ச்சிக்கான மையக் காரணம். உற்பத்தி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு, ஐ.டி. துறை, மொபைல் நெட்வொர்க் துறைகள், பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டீல், பெட்ரோலியம், கெமிக்கல் என இதர துறைகளிலும் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.
பொறியியல் படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சார்ந்த வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்புத் துறைகளிலும் பணி வாய்ப்பு பெறலாம். மேலும் நவீன டெக்னாலஜிகளான ரோபோட்டிக்ஸ், தானியங்கி கார்கள் போன்ற ஸ்மார்ட் கண்டுபிடிப்புகள், ஆட்டோமேஷன் தொழில்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாகிவருகின்றன. பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த வேலைவாய்ப்புகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெருகி வருகின்றன.
* தேவையான திறன்கள்
அப்டேட் ஆகும் புதுப்புது டெக்னாலஜி பற்றிய அறிவை மேம்படுத்திக்கொள்வது இத்துறைக்கான முக்கிய தேவையாகும். தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் மென்பொருளில் பயிற்சி பெற்றிருப்பதும் வேலைவாய்ப்பைப் பிரகாசமாக்கும்.
* கல்வி நிறுவனங்கள்
இந்தியாவின் அனைத்து ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள், என்.ஐ.டி. என மத்திய-மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல முன்னணித் தனியார் கல்வி நிறுவனங்களிலும் சர்வதேசத் தரத்திலான எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் சார்ந்த பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
''உற்பத்தி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு, ஐ.டி. துறை, மொபைல் நெட்வொர்க் துறைகள், பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டீல், பெட்ரோலியம், கெமிக்கல் என இதர துறைகளிலும் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.