ஒப்பீடும்.. மதிப்பீடும்..
|ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித்தன்மை நிலைத்திருக்கும். அதனை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியம். சிலர் தங்களுக்குள் இருக்கும் தனித்திறனை அறிந்து கொள்ளும் மனப்பக்குவம் இன்றியோ, வெளிப்படுத்துவதற்கு ஆர்வமின்றியோ இருப்பார்கள். அதேவேளையில் மற்றவர்களிடம் இருக்கும் தனித்தன்மை நம்மிடம் இல்லையே என்று ஏங்குவார்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து தங்களைத் தாங்களே குறைத்து மதிப்பீடு செய்து கொள்வார்கள்.
ஒருவருடைய குணாதிசயமும், சுபாவமும் மற்றவரை போலவே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவருக்குள் இருக்கும் தனித்தன்மை அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும். அதனை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது இழப்பையே ஏற்படுத்தும். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படுவது இயல்பானது.
ஒருவரது தனித்திறன்கள், குணங்கள்தான் அவரது அந்தஸ்தை தீர்மானிக்கும். மற்றவர்கள் விமர்சிக்கும் அளவிற்கு குறைபாடுகள் இருந்தால் மாற்றிக்கொள்வதில் தவறில்லை. அதற்கு முதலில் உங்களைப் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் நீங்களாக இருப்பதுதான் உங்களுக்கான தனித்துவத்தை அடையாளப்படுத்தி காண்பிக்கும். அவரவர் செய்யும் நன்மை, தீமைகளுக்கு அவரவரே முழு பொறுப்பேற்க முடியும். மற்றவர்களை குறை கூறுவதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட முயற்சிப்பதிலும் தவறில்லை. அதற்காக அவரை போலவே குணாதிசயத்தை மாற்றவோ, நடிக்கவோ முயற்சிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். தோற்றத்தால் மட்டுமே ஒருவர் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவதில்லை. அவர்களுக்குள் இருக்கும் தனித்தன்மையும் வேறுபடுத்தி காட்டும். அதனை புரிந்து கொண்டால்தான் தன்னுடைய தனித்தன்மையை உணர முடியும். வாழ்க்கையும் மகிழ்ச்சியாக நகரும்.