அரிய பொக்கிஷங்கள் அடங்கிய கோவை வன அருங்காட்சியகம்
|வனம், வன விலங்குகள், வண்ணப்பறவைகள், பசுமை என இயற்கையோடு இரண்டற கலந்திருக்கும் சூழல் அனைத்து மக்களையும் கவரும்.
இயற்கையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். இந்த எண்ணத்தை அனைத்து மக்களுக்கும் பறைசாற்றும் வகையில் கோவை ஆர்.எஸ் புரம் வனக்கல்லூரி அலுவலக வளாகத்தில் 'காஸ்' வன அருங்காட்சியகம் பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில், எச்.ஏ.காஸ் என்ற ஆங்கிலேய வன அதிகாரி என்ற தனி மனிதரின் முயற்சியால் 1902-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 18.9.1905 முதல் 'காஸ் வன மியூசியம்' என்றே இது அழைக்கப்படுகிறது. மத்திய வன மரபியல் விதை ஆராய்ச்சித்துறை இந்த அருங்காட்சியகத்தை தற்போதும் பழமை மாறாமல் இயக்கி வருகிறது. இந்திய வன அருங்காட்சியகங்களில் இதுதான் பழமையானது, முதன்மையானது. அதற்கு அடுத்தபடியாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மற்றொரு அருங்காட்சியகம் உள்ளது. கோவையில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேலானவை வன விலங்குகள், பறவைகள் தொடர்பானதாகும். இங்கு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாரத்தின் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள், சிறுவர், சிறுமிகள் இதனை அதிக எண்ணிக்கையில் பார்வையிடுகிறார்கள்.
அரிய பொக்கிஷம்
'இந்திய வனம் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு இரண்டு, மூன்று மணி நேரத்தில் இங்கு பார்க்கும் காட்சியே பதிலாக அமையும்படி உள்ளது. குறிப்பாக சாதாரண தாவரத்திலிருந்து உயர்ந்தோங்கிய மரம் வரை, விதை முதல் விருட்சமான மரத்தின் பல வகைகள் வரை, யானையின் எலும்பு கூடுகள் முதல் யானையின் சிறு கருக்கள் வரை என பலவும் பாதுகாக்கப் படுகிறது. குறிப்பாக பூமியில் உலா வந்த பல விலங்குகள், இறந்த பின்பு இந்த அருங்காட்சியகத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் நடுவே, பிரமாண்டமாக இந்தியன் பைசன் (காட்டெருமை) முழு உருவம் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. இதனை 1956-ம் ஆண்டு மைசூரு மகாராஜா, ஜெய் சாமராஜ உடையார் அருங்காட்சியகத்துக்கு பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் காலத்தில் வனங்களில் சுற்றித் திரிந்த சிறுத்தை, யானை போன்றவற்றின் உடல் உறுப்பு பாகங்கள் மற்றும் உருவங்கள் பத்திரப்படுத்தியும், பதப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளது.
65 மில்லியன் வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்த நத்தை ஓடு மற்றும் வெள்ளை நிற காகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 460 ஆண்டு பழமையான தேக்கு மரம், பழமையான செம்மரம், 1.75 டன் எடையுள்ள சந்தன மரம் ஆகியவையும் இதுவரை நாம் கேள்விப்பட்டிராத 135 வகையான மரங்களின் துண்டுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பல வகையான விதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வேட்டை ஆயுதங்கள்
அதேபோல வன விலங்கு வேட்டைகள் தடை செய்யப்படுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமையான வில், அம்பு, கோடரி போன்ற பல வகையான இரும்பு ஆயுதங்கள் மற்றும் பல வகையான நாட்டு துப்பாக்கிகள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 3 கொம்புகள் உடைய மானின் கொம்பு அரிதானது. இதுவும் பார்வையாளர்களை கவருகிறது. மேலும் பல வகையான வன விலங்குகளின் கொம்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பல வகையான பாம்புகள், இறந்த யானைகள் ஆகியவை பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் சுவர்களை சுற்றியும் வேட்டையாடப்பட்ட ஆடு, மாடு, பல வகையான மான்கள், காட்டெருமை போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட தலை உருவங்கள், நட்சத்திர மீன்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
அழியும் நிலையில் உள்ள இருவாச்சிப்பறவை இனத்தில், மிகப்பெரிய பறவை பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி லங்குர் குரங்கும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகளில் இத்தனை வகைகளா? என்று வியக்கும் வகையில் ஏராளமான வகைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியின் கண்காணிப்பாளர் சுனிதா கூறியதாவது, ''ஆண்டுதோறும் இந்த அருங்காட்சியகத்தை 30 ஆயிரம் பேர் பார்வையிடுகிறார்கள். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கட்டணமாக ரூ.20-ம், 18 வயதுக்கு மேலானவர்களுக்கு கட்டணமாக ரூ.40-ம், வெளிநாட்டினருக்கு கட்டணமாக ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது. அருங்காட்சியகம் அனைவரும் விரும்பி பார்க்கத்தகுந்ததாகும். இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய விஷயங்கள் அனைவரின் மனதிலும் பதியும்'' என கூறினார்.
கோவையின் வன அருங்காட்சியகம் நீண்ட பாரம்பரியத்துடன் இன்றும் பொலிவுடன் திகழ்வது குறிப்பிடத்தக்கது.