மேகங்களையும் இனி செயற்கையாக உருவாக்க முடியும்
|செயற்கை மழை பெய்விக்கும் வித்தையை விஞ்ஞான உலகம் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. விண்ணில் குறிப்பிட்ட அளவில் சில்வர் அயோடைட் ரசாயனத்தை விமானம் மூலம் சென்று ஸ்பிரே செய்து செயற்கையாக கருமேகத்தை உருவாக்கி இந்த முறையில் மழை பெய்ய வைக்க முடியும். இந்த முறை மிகவும் காஸ்ட்லியும் கூட. இதற்கு மாற்றாக இன்னொரு நுட்பத்தை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தந்த பருவத்தில் சரியாக மழை பொழிந்து விவசாயம் செழித்தது. இப்போதெல்லாம் அப்படியில்லை. பருவம் தவறித்தான் மழை பெய்கிறது. இதனால் பல இடங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது.
தண்ணீரின் தேவையை இப்போதுதான் நன்கு உணர ஆரம்பித்திருக்கிறது இந்த உலகம். எனவே, விரும்பிய நேரத்தில் மழையை வரவழைக்க வேறு வழி உண்டா? என்ற ஆய்வும் சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த ஆய்வு மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது.
அதாவது, செயற்கை மேகத்தை உருவாக்கி மழை பெய்ய வைக்க முடியும் என்பதை சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் ஜெனிவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுதான் இச்சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இதற்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக ஆய்வகத்தில் மேகத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளனர் இவர்கள். இதற்காக மைனஸ் 24 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நீர் நிரம்பிய கொள்கலன் வழியாக அகச்சிவப்பு (இன்பிராரெட்) கதிர்களைச் செலுத்தினார்கள். அப்போது நீர்த்திவலை ஆவியாகி மேகம் உருவானது. இதை சாதாரண கண்களால் ஆய்வகத்தில் பார்க்க முடிந்தது. ஆய்வக நிலையில் மட்டுமல்லாது வெளிப்பரப்பிலும் இச்சோதனை வெற்றி பெற்றிருக்கிறது.
இதெப்படி சாத்தியம்..?
''லேசர் கதிரானது அணுக்களில் உள்ள எலெக்ட்ரானை ஒடுக்குவதன் மூலம் 'ஹைட்ராக்ஸைல்' என்ற வேதிப் பொருள் அதிகளவில் உருவாவதை ஊக்குவிக்கிறது. இது தொடர்ந்து வினைப்பட்டு சல்பர் மற்றும் நைட்ரஜன்-டை-ஆக்ஸைடை உருவாக்குகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் நீர் மூலக்கூறுகள் அடர்த்தி குறைந்து நீராவி நிலைக்குச் சென்று மேகம் உற்பத்தியாகிறது.
இதை கண்கூடாகப் பார்க்க முடியும். இந்த ஆய்வில் விண்வெளியில் 60 மீட்டர் உயரத்தில் மேகம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம். 50 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) அகலமுள்ள நீர் மூலக்கூறு அடர்த்தி குறைந்து ஆவியாகும்போது 80 மைக்ரோமீட்டராக விரிவடைகிறது. எனவே குறைந்தளவு நீரைப்பயன்படுத்தி அதிகமாக மேகத்திரளை ஏற்படுத்தி மழையை வரவைக்க முடியும்'' என்கிறார் ஆய்வுக்குழுத் தலைவர் ஜெரோம் காஸ்பாரியன்.
இனி விரும்பும் நேரத்தில் மழை வரும் காட்சியை இந்த உலகம் பார்க்கப்போகிறது.
இதற்காக மைனஸ் 24 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நீர் நிரம்பிய கொள்கலன் வழியாக அகச்சிவப்பு (இன்பிராரெட்) கதிர்களைச் செலுத்தினார்கள். அப்போது நீர்த்திவலை ஆவியாகி மேகம் உருவானது. இதை சாதாரண கண்களால் ஆய்வகத்தில் பார்க்க முடிந்தது.