கால்கள் இன்றி கனவுகளை வென்ற விளையாட்டு வீரர்..!
|"கால்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் காணும் கனவுகளை வெல்லலாம்" என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் சேலம் கோகுலகண்ணன். 43 வயதான இந்த நம்பிக்கை நாயகனிடம் இருந்து சமூகம் கற்றுக்கொள்ள வேண்டிய தன்னம்பிக்கை ஏராளம். தவழ்ந்து சென்று விளையாட்டு மைதானத்தில் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த இவருக்குள் தானும் விளையாட வேண்டும் என்ற உத்ேவகம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பொறியை தீப்பந்தமாக்கி நினைத்தது போல விளையாட்டிலும் சாதித்து விட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வாள் சண்டை, எறிபந்து, கைப்பந்து, குண்டு எறிதல், கை மல்யுத்தம், சக்கர நாற்காலி ஓட்டம், வில்வித்தை, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல வகையான போட்டிகளில் ஈடுபட்டு தங்கம், வெள்ளி என பதக்கங்களை குவிக்கிறார். வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்குபெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கோகுலகண்ணன் படிப்பிலும் ஒரு வித்தியாசமான சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ, முதுநிலை பட்டம் என்று மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த இவரிடம், '12-ம் வகுப்பு முடித்தால்தான் அரசு வேலை' என்றதும், அதையும் படித்து அரசு வேலையும் வாங்கி விட்டார். இப்போது சேலம் உடையாப்பட்டி மத்திய மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார்.
"முதுநிலை பட்டப்படிப்புக்கு பிறகு 12-ம் வகுப்பு படித்து அரசு வேலையை பெற்ற சாதனையும் எனக்கு சொந்தம்" என்று கூறும் அவர் வாழ்க்கையில் திருமணத்துக்கு பிறகுதான் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் மனைவியை கொண்டாடுகிறார்.
வீட்டில் சிட்டிங் வாலிபால் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த கோகுலகண்ணனை சந்தித்தோம். கனவுகளை வென்றெடுத்ததை அவரே சொல்ல கேட்போம்.
''சேலம் அழகாபுரம் என்னுடைய சொந்த ஊர். தந்தை ராஜமாணிக்கம், தாய் கெஜலட்சுமி, தம்பி மணிகண்டன். பிறவியிலேயே 2 கால்களும் பாதிப்புடன்தான் நான் பிறந்தேன். சேலம் ராமகிருஷ்ணா பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து விட்டு ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்தேன். அப்போது டிப்ளமோ சான்றிதழ் இருந்தாலே தொலைதூர கல்வியில் இளநிலை பட்டம் பெறலாம். எனவே 2001-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பி.சி.ஏ. படித்தேன். கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக டான்செட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். பின்னர் நாமக்கல் முத்தாயம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் ரெகுலர் படிப்பில் எம்.சி.ஏ. சேர்ந்து படித்து முடித்தேன்'' என்றவர், அரசு வேலை கிடைத்தது பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
''கல்லூரி படிப்பை முடித்த பிறகு சில நாட்கள் வேலையின்றி இருந்தேன். ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாக வேரூன்றி இருந்தது. அப்போது பிளஸ்-2 படிப்பை முடித்திருந்தால் நன்றாக இருக்கும் என அரசு வேலையில் இருந்தவர்கள் கூறினர். அதன்படி டூட்டோரியலில் 12-ம் வகுப்பு ேதர்வு எழுதி வெற்றி பெற்ேறன். இப்போது அதை நினைத்தாலும் எனக்கு வியப்பாக தோன்றும். முதுநிலை பட்டம் பெற்ற பிறகு பிளஸ்-2 முடித்த முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்'' என நெகிழ்ச்சியுடன் கூறினார் கோகுலகண்ணன்.
''எனக்கு 32 வயது ஆன போது, பெங்களூருவில் உள்ள ஜெர்மனி வங்கி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். என்னுடைய பெற்றோர் விருப்பத்தின் பேரில் தூரத்து சொந்தமான அபிராமியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். அவள், என்னுடைய வாழ்க்கை துணை மட்டும் அல்ல. எனக்கு தூணாகவும் இன்று நிற்கிறாள். அவளை திருமணம் செய்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்கின.
கால்களில் பாதிப்பு இருந்தாலும் நாம் சாதிக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தை விருட்சமாக்கியவள் என்னுடைய மனைவி அபிராமி. 2014-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்தது. அதில் நான் தேர்வு செய்யப்பட்டேன்'' என்று மனம் மகிழும் கோகுலகண்ணன், தற்போது சேலம் உடையாப்பட்டி கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார். இவர்களது திருமண வாழ்க்கைக்கு பரிசாக 5 வயதில் தேவநாத் என்ற மகன் உள்ளார்.
''வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் போதும் சரி, மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதும் சரி விளையாட்டின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை பலமுறை அவளிடம் கூறி இருக்கிறேன். அவள், என்னை பலமுறை உற்சாகப்படுத்தி ஊக்குவித்தாள். சிறு வயதில் இருந்தே என்னுடைய விளையாட்டு ஆர்வத்தை அறிந்து இருந்த பெற்றோரும், தம்பி மணிகண்டனும் அதற்கான உதவிகளை செய்ய முன்வந்தனர்.
2021-ம் ஆண்டு கோவையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் என்னை அழைத்து சென்றனர். மாநில அளவில் நடைபெற்ற தேர்வில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் நானும் ஒருவன். அந்த தருணம்தான், என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையானது.
அதன்பிறகு வாள்சண்டை, சிட்டிங் வாலிபால் (உட்கார்ந்து விளையாடும் கைப்பந்து), எறிபந்து, குண்டு எறிதல், கை மல்யுத்தம், மாற்றுத்திறனாளிகள் ஓட்டப்போட்டி (சக்கர நாற்காலியில் வேகமாக செல்லுதல்) உள்ளிட்ட போட்டிகள் விளையாட தொடங்கினேன். அதற்காக பல்வேறு கட்ட பயிற்சிகளை மேற்கொண்டேன். தரையில் உட்கார்ந்தால் யாராவது ஒருவரது துணையுடன்தான் எழுந்திருக்க முடியும் என்ற நிலையில்தான் இன்னும் இருக்கிறேன். ஆனாலும் விளையாட்டுகளில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் விருட்சமானது. அதன் விளைவுதான் மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் பாயில் பிரிவிலும், சுபி பிரிவிலும் வெள்ளி பதக்கம் வென்றேன்.
கோவையில் நடந்த இன்னொரு மாநில அளவிலான போட்டியில் வாள் சண்டையில் பென்சிங் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றேன். அதன்பிறகுதான் 2022-ம் ஆண்டு ஒடிசாவில் நடந்த 14-வது தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில் கலந்து கொண்டேன். அதில் வெண்கல பதக்கம் பெற்றேன். பின்னர் இந்திய மாற்றுத்திறனாளிகள் வாள்சண்டை அணி சார்பில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் நடந்த உலக வாள்சண்டை சாம்பியன் போட்டியில் விளையாட சென்றேன். அதில் சேபர் பிரிவில் உலக அளவில் தரவரிசையில் 30-வது இடத்தையும், பாயல் பிரிவில் உலக அளவில் தரவரிசையில் 49-வது இடத்தையும் பிடித்தேன்.
இதுஒருபுறம் இருந்தாலும் 2022-ம் ஆண்டு நடந்த 14-வது தேசிய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டியில் 3-வது பரிசு பெற்றதுடன் இந்திய அணியிலும் இடம் பிடித்தேன். அடுத்த மாதம் (மே) நேபாளத்தில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் சிட்டிங் வாலிபால் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்கிறது. அதில் நானும் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதுதவிர மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், கை மல்யுத்தம், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளிலும் மாவட்ட, மாநில, தேசிய அளவில் என பல்வேறு நிலைகளில் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வாங்கி உள்ளேன். கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும், பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்'' என்றவர், நல்ல உள்ளங்கள் மற்றும் அரசின் ஊக்கம் கிடைத்தால், இன்னும் அதிகமாக சாதிக்கமுடியும் என்கிறார்.
''என்னுடைய முயற்சி, நம்பிக்கையில் நான் ஓடிக்கொண்டு இருந்தாலும் அதற்கான பொருளாதார தேவையோ அதிகமாக உள்ளது. அரசும், விளையாட்டு ஆர்வலர்களும் உதவினால் இன்னும் சாதிக்க முடியும். வரும் காலங்களில் என்னை போன்று மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்களை கண்டறிந்து, அதுவும் கிராமங்களில் முடங்கி போய் கிடக்கும் மாற்றுத்திறனாளிகளை தேடிப்பிடித்து அவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க இலவச பயிற்சி மையம் தொடங்கலாம் என ஆசைப்படுகிறேன்.
எறிபந்து போட்டிக்கான இந்திய அணியில் உள்ளேன். பாரா ஒலிம்பிக் இந்தியா-நேபாளம் சார்பில் நடந்த எறிபந்து போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தருணம் இன்னும் மனதை விட்டு நீங்காமல் உள்ளது.
உலக சாம்பியன்ஷிப் எறிபந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் வருகிற ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. அதில் இந்திய அணி சார்பில் கலந்து கொள்ள இருக்கிறேன். நிச்சயம் தங்கம் வெல்வேன்'' என்கிறார் கோகுலகண்ணன்.
அவரது நம்பிக்கை செயல்வடிவம் பெற சபாஷ்!
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்போட்டி, குண்டு எறிதல், கை மல்யுத்தம், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளிலும் மாவட்ட, மாநில, தேசிய அளவில் என பல்வேறு நிலைகளில் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வாங்கி உள்ளேன்.