< Back
இளைஞர் மலர்
வில்வித்தை சாம்பியன்..!
இளைஞர் மலர்

'வில்வித்தை' சாம்பியன்..!

தினத்தந்தி
|
21 Oct 2023 5:40 PM IST

வில்வித்தையில், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன், பயிற்சி பெற்று வருகிறார் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 12 வயது ஆதிஸ். வில்வித்தை போட்டிகளில் பல வெற்றிகளை பதிவு செய்திருக்கும் ஆதிஸ், ஒலிம்பிக் இலக்கை நோக்கி எய்துவரும், பயிற்சி அம்புகளை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

''என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர். தந்தை நந்தகுமார், தாய் பிரியதர்ஷினி. வீட்டுக்கு ஒரே பையன். நான் தவழ்ந்து விளையாட தொடங்கிய நாட்களில் இருந்து இன்று வரை எங்கு சென்றாலும் விளையாட்டு பொருள் என்று வாங்கினால் அது வில்லாகத்தான் இருக்கும். இல்லை என்றால் துப்பாக்கியாக இருக்கும்.

வீட்டில் ஏதாவது ஒரு இடத்தை இலக்காக வைத்து குறி பார்த்து சுடுவதையும், எறிவதையுமே என் விருப்ப விளையாட்டாக மாற்றிக்கொண்டேன் என என்னுடைய தாத்தா பழனிவேல் இப்போதும் கூறுவது உண்டு. குறி பார்த்து விளையாடுவதை பார்த்த என்னுடைய தந்தை, எனக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி கொடுக்கலாமா என யோசித்து இருக்கிறார். அதை விட வில்வித்தையில் என்னை அதிகம் சாதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கைதான் இன்று என்னை உயர்த்தி இருக்கிறது'' என்று முன்கதை கூறும் ஆதிஸ், வில்வித்தை பயிற்சிகளை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

''போட்டிகளில் விளையாட தொடங்கிய காலகட்டத்தில், கனமான வில்லை தூக்கி அம்பை எய்வதற்கு சிரமமாக இருந்தது. தினமும் காலையிலும், மாலையிலும் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டதால், கால ஓட்டத்தில் அது எனக்கு கடினமாக தெரிவது இல்லை.

என்னுடைய பயிற்சியாளர் மதன்குமார் பயிற்சியின் போதும், போட்டியின் போதும் விளையாட்டின் நுட்பங்களை ஒவ்வொன்றாக கற்றுத் தருகிறார். களத்தில் இறங்கியவுடன் எதிரே உள்ள இலக்கு மட்டும்தான் என்னுடைய கண்களிலும், சிந்தனையிலும் இருக்கும். அதில் இம்மி அளவு கூட என் மனம் இடம் மாறாது. அந்த அளவுக்கு நான் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக்கொண்டேன்.

5 வயதில் போட்டிகளில் கால் பதித்த நான், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கிறேன்'' என்றவர், உலக வில்வித்தை போட்டியில் கலந்து கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

''7 வயதில், உலகப் போட்டியில் கலந்து கொள்ள தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு சென்றிருந்தேன். அங்கு உலக நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து இருந்தனர். அது பொதுப்பிரிவுக்கான போட்டியாக இருந்தது. 25, 30 வயது வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். நான் மட்டும் சிறுவனாக அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அவர்களை பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. அவர்கள் எல்லாம் என்னை இந்த சிறுவனா விளையாட போகிறான் என்று வியப்பாக பார்த்ததாக என் தந்தை அடிக்கடி கூறுவார்.

அப்போது நான் வில் எய்த முறையை பார்த்த மற்ற நாட்டு வீரர்கள் எனக்கு ஆளுக்கொன்றாக சிறு சிறு பரிசை கொடுத்து பாராட்டு தெரிவித்தனர். அந்த நிகழ்வை என்னுடைய குடும்பத்தினர் இன்னமும் அடிக்கடி என்னிடம் நினைவு கூருவது உண்டு'' என்றவர், வில்வித்தை போட்டிகளில் வெற்றிபெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

''2016-ம் ஆண்டு வில்வித்தையில் முதல் தங்கப்பதக்கத்தை பெற்ற நான் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வாங்க தொடங்கினேன். 2017-ம் ஆண்டு மதுரையில் நடந்த பள்ளி அளவிலான மாநில போட்டியில் தங்கம் வென்றேன். அதன் மூலம் தாய்லாந்தில் நடந்த ஆசிய அளவிலான போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்வானேன். அந்த போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தேன்.

கடந்த ஆகஸ்டு மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த ஆசிய இளையோர் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தகுதி சுற்று போட்டியிலும் நான் தங்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை நான் கலந்து கொண்ட போட்டிகளிலே தங்க பதக்கங்கள்தான் அதிகம்'' என்றவரிடம், பயிற்சிகள் பற்றிய தகவல்களை கேட்டோம். அதற்கு அவர் பகிர்ந்து கொண்டவை...

''தினமும் காலையிலும், மாலையிலும் பயிற்சியை தவறவிடுவது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் பயிற்சிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். உணவு முறைகளை பொறுத்தவரையில் நான் கட்டுப்பாடு எதுவும் வகுத்து கொள்வது கிடையாது. உடல் திறனுக்காக புரதம் சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வேன்'' என்று கூறும் ஆதிஸ், வில்வித்தை குறித்து கூறும் தகவல்களும் நமக்கு பிரமிப்பை தருகின்றன.

''வில்வித்தை போட்டியானது 5, 6, 7, 8, 10, 11, 14, 17, 19, 21, 25, 28 வயது மற்றும் சீனியர், மிக மூத்தோர், ஓபன், பொதுப் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. அதிலும் இந்தியன், ரெக்கவ், காம்பவுண்டு என்ற பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறும். 5 மீட்டர் முதல் 90 மீட்டர் வரை இந்த போட்டிக்கு பல்வேறு பிரிவுகளாக தூரங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்படுகிறது.

வில்வித்தை இன்று பூடான் நாட்டு தேசிய விளையாட்டாக இருக்கிறது. ஆனால் நம்முடைய முன்னோர்கள் போரின் போதும், தற்காப்பு கலைக்காகவும், வேட்டையாடவும் இந்த வில்வித்தையை கற்று தேர்ந்தவர்களாக இருந்ததை நாம் பாடப்புத்தகங்களில் படித்து வருகிறோம்.

என்னுடைய தாய், தந்தை மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுக்கும் ஊக்கம்தான் இன்று என்னை சாதனையாளராக மிளிரச் செய்து கொண்டிருக்கிறது. வில்வித்தையில் என்னுடைய இலக்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்வதுதான். அதையே என் லட்சியமாக நிர்ணயித்து தினமும் பயிற்சிகளை மேற்கொள்வதும், போட்டிகளில் விடாமல் கலந்து கொள்வதுமாக இருக்கிறேன். அந்த ஒலிம்பிக் கனவை நிச்சயம் நனவாக்குவேன்''

என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

5 அடி உயர வில்

வில்வித்தையில் சாதித்து வரும் ஆதிஸ் உயரமோ, 4¾ அடி உயரம்தான். ஆனால் அவர் பயன்படுத்தும் வில்லானது 5 அடி உயரத்தில் இருக்கும். ஆதிஸை விட ¼ அடி உயரம் கூடுதலாக இருந்தாலும் அதனை லாவகமாக தூக்கி அம்பை எய்வதை பார்க்கும் போது போட்டி அரங்கில் இருப்பவர்கள் எல்லாம் மெய்சிலிர்த்து போகிறார்கள். அந்த அளவுக்கு வில்லையும், அம்பையும் ஆதிஸ் கையாளும் விதம் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.

மேலும் செய்திகள்