செல்லப்பிராணிகளுக்கான விமான சேவை...
|ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த விமான பயணம் இன்று சாமானியர்களும் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக மாறிவிட்டது. இருந்தாலும் தனிநபர்கள் விமானத்தில் செல்வது சற்று சொகுசாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதில் சற்று வித்தியாசமாக நாய்கள் போன்ற செல்லப்பிராணிகளை அழைத்து செல்வதற்காகவே தனியார் விமான சேவையை துபாயில் வசித்து வரும் இங்கிலாந்து தம்பதியர் ஆடம் கோல்டர் மற்றும் கிறிஸ்டி ஆகியோர் செய்துள்ளனர். வர்த்தக நோக்கில் செய்திருந்தாலும் இந்த யோசனை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில், 90 சதவிகித வீடுகளில் செல்லப்பிராணிகளை காண முடியும். குறிப்பாக நாய், பூனை, இகுவானா உட்பட பலவற்றையும் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதுண்டு. அப்படி மேற்கத்திய செல்லப்பிராணி கலாசாரத்துடன் அமீரகத்தில் பலரும் குடியேறி இருக்கிறார்கள். தங்கள் நாடுகளை போலவே, அவர்கள் அமீரகத்திலும் நிறைய செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள். இருப்பினும், விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊர் செல்கையில், செல்லப்பிராணிகளை அமீரக வீட்டிலேயே தவிக்கவிட்டு சென்றுவந்த நிலையில், இனி அவற்றையும் தங்களோடு அழைத்து செல்ல முடியும்.
ஆம்...! இத்தகைய புதுமுயற்சியைதான், ஆடம் கோல்டர் மற்றும் கிறிஸ்டி தம்பதியினர் முன்னெடுத்துள்ளனர்.
துபாய்-லண்டன் நகரங்களுக்கு இடையே தனியார் ஜெட் விமானங்களை இந்த தம்பதியர் இயக்க உள்ளனர். நடப்பு மாதத்தில் தொடங்க உள்ள இந்த சேவையை பயன்படுத்தி தனிநபர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை மடியில் வைத்தே பயணம் செய்யமுடியும் என்பது சிறப்பாகும்.
''பயணிகள் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல முடியும். ஆனால் அதற்கு என பிரத்யேக அறையில் வைத்து, பல நடைமுறைகளுக்கு பிறகுதான் கொண்டு செல்ல முடியும். ஆனால் நாங்கள் முன்னெடுத்திருக்கும் முயற்சியினால், செல்லப்பிராணிகளை அவரவர் மடியிலேயே வைத்து பயணிக்க முடியும்'' என்கிறார்கள், புதுமை தம்பதியினர்.
இவர்களது முயற்சி சூப்பர் என்றாலும், கட்டணத்தை கேட்டால்தான் சற்று மயக்கம் வருவது போல தோன்றும். செல்லப்பிராணி மற்றும் அதன் உரிமையாளர் அமர்ந்து செல்ல 36 ஆயிரத்து 454 திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8¼ லட்சம்) செலுத்த வேண்டும். இதனை ஆச்சரியத்துடன் பார்க்கும் சாதாரண மக்கள் அப்போது நாய் விலை எவ்வளவு இருக்கும் என யோசித்து செல்வது வேடிக்கையாக உள்ளது.