டீக்கடையில் இருந்து ஒரு பிரபலம்
|இன்றைய காலக்கட்டத்தில், சமூக வலைத்தளம்தான் பிரதானமான பொழுதுபோக்காக விளங்குகிறது.
தங்கள் நேரத்தை வீணாக சமூக ஊடகங்களில் பலரும் செலவழிக்க, அதே ஊடகம் சிலரது வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றியுள்ளது. அதனை தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக பயன்படுத்தி வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றுவிடுகிறார்கள். தங்கள் பொருளாதார நிலைமையை மேம்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள். ஒரே நாளில் வைரலாக மாறி புகழின் உச்சிக்கு சென்றவர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரே இரவில் பிரபலமானவர்களுள் பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத்கானும் ஒருவர்!
நீல நிறக்கண்தான் இவரை சமூக ஊடகத்தில் பலருக்கும் பரீட்சயமான நபராக மாற்றிவிட்டது. 2016-ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் சண்டே பஜாரில் உள்ள டீக்கடையில் அர்ஷத்கான் வேலை செய்தார். இவர் டீ தயாரிப்பதை ஜியா அலி என்ற புகைப்படக்கலைஞர் படம் பிடித்தார்.
அது எப்படி வைரலானது என்கிறீர்களா?
அர்ஷத்கான் அன்று நீல நிறத்தில் சட்டை அணிந்திருந்தார். அவருடைய கண்களும் நீல நிறம் என்பதும், அவருடைய பார்வையில் மிளிர்ந்த வசீகரமும், டீ தயார் செய்யும் விதமும் ஒருசேர மிளிர்ந்து யதார்த்தமான காட்சியாக பதிவாகி விட்டது. வசீகர கண்களுடன் டீ தயார் செய்தபடி அவர் பார்க்கும் தொனி வைரலாகி உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை கவரச் செய்துவிட்டது.
அர்ஷத்கான், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மர்டானைப் பூர்வீகமாகக் கொண்டவர். குடும்பத்தில் நிலவிய வறுமை சூழல் காரணமாக பள்ளி படிப்பை கூட அவரால் தொடர முடியவில்லை. சாதாரண டீக்கடை ஊழியராக பணியாற்றியவர் அந்த வைரல் புகைப்படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அந்த சமயத்தில் சினிமாவிலும், மாடலிங்கிலும் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அதனை அவர் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
புதிதாக கிடைத்த புகழ் வெளிச்சத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார். அதிலும் தன்னுடைய மொழித்திறனை மேம்படுத்தவும், வணிக நுணுக்கங்களை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டினார். இறுதியில் தன்னை தொழில் முனைவோராக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினார். அதன் வெளிப்பாடாக 2020-ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் 'சாய் கபே' என்ற நிறுவனத்தை தொடங்கினார். மேலும் மூன்று விற்பனை கிளைகளையும் கூடுதலாக திறந்துள்ளார். அவற்றுள் இரண்டு லாகூரிலும், மற்றொன்று முர்ரியிலும் அமைந்திருக்கிறது.
இப்போது, அர்ஷத் கான் மீண்டும் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார். இந்த முறை, அவரது தோற்றத்திற்காக அல்ல. தனது அந்தஸ்தை உயர்த்திக்கொண்டதற்காக.
ஆம்! பாகிஸ்தானை தாண்டி தற்போது கிழக்கு லண்டனில் உள்ள இல்போர்ட் லேனில் தனது டீ கடையின் கிளையை நிறுவியுள்ளார். தனது குடும்ப வறுமையை விரட்டுவதற்காக இஸ்லாமாபாத்தில் டீ விற்பனை செய்தவர், நாடு கடந்து தனது நிறுவனத்தை தொடங்குவதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார். தனது அந்தஸ்து இந்த அளவிற்கு உயரும் என்றும் எண்ணி இருக்க மாட்டார். அந்த பூரிப்புடன் லண்டனில் தனது கிளையை திறந்ததற்கான காரணத்தை கூறுகிறார்.
''இங்கு பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள் மற்றும் வங்காளதேச மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டே இங்கு 'கபே'யை திறந்திருக்கிறேன். இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வணிகத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளேன். எனது நிறுவனத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதுதான் எனது நோக்கம்'' என்கிறார்.
இதற்காக இங்கிலாந்தை சேர்ந்த முதலீட்டாளர்களுடன் 'பிரான்சைஸ்' ஒப்பந்தத்திற்கு பிறகு, சர்வதேச அளவில் கபேக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இவரது நிறுவனம் உலகளாவிய பிராண்டாக மாற இது அடித்தளமாக இருக்கிறது.
ஒரு எளிய தேநீர் விற்பனையாளராக இருந்து தற்போது உரிமையாளராக மாறி உள்ள தனது பயணம் மிகுந்த சவால்கள் நிறைந்தது என்றும் கூறுகிறார்.
இப்போது நடிப்பு மற்றும் மாடலிங் வாய்ப்புகளும் அவரை தேடி வருகிறது. இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் விளம்பர அம்பாசிடராகவும் மாறி இருக்கிறார். சிட் மிஸ்டர் ராப்பர் மற்றும் டிஜே டேனி ஆகியோர் அவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஒரு பாடலையும் வெளியிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது வாழ்க்கை பயணம் குறித்த தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறார். அர்ஷத்கானை பொறுத்தவரை, சமூக ஊடகங்கள் ஒருவரது கனவினை நனவாக்கி அவரை எட்டா உயரத்திற்கு அழைத்து செல்லும் என்று சொன்னால் அது மிகையில்லைதான்.