அனிமேஷன் படம் இயக்கிய 12 வயது பள்ளி மாணவி
|குழந்தைகளுக்கு அனிமேஷன் தொடர்கள், திரைப்படங்கள் என்றால் கொள்ளை பிரியம். அனிமேஷன் உலகிற்குள் சென்றுவிடும் அளவிற்கு, மெய்மறந்து ரசிப்பார்கள்.
இப்படிப்பட்ட அனிமேஷன் தொடர்களை, பெரியவர்கள் உருவாக்க சிறுவர்-சிறுமியர் ரசிப்பதுதானே வழக்கம். ஆனால் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 12 வயது நிரம்பிய அகஸ்தி என்ற சிறுமி தான் கண்டு வியந்த அனிமேஷன் திரைப்படங்களை போலவே, சுயமாக ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கி இருக்கிறார். குண்டான் சட்டி என பெயரிடப்பட்டிருக்கும் அந்த திரைப்படம், 2 மணி நேரம் ஓடுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், 8-ம் வகுப்பு படித்து வரும் அகஸ்தியை சந்தித்து அவரது இந்த சாதனை குறித்து கேட்டோம். அவர் பகிர்ந்து கொண்டவை...
''குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றதும் மைதானத்திற்கு விளையாட செல்வார்கள். சிலர் செல்போனில் விளையாடுவார்கள். ஆனால் நான் பள்ளி மற்றும் வீடுகளில் இருந்த நூலகத்தின் மூலம் புத்தகங்கள் படிப்பேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம், கொரோனா காலத்தில்தான் அதிகரித்தது. நிறைய புத்தகங்கள் படித்ததால், எனக்கும் புத்தகம் எழுத ஆசை வந்தது. அதன்படி நானும் புத்தகம் எழுதினேன்.
மேலும் அதிகளவில் அனிமேஷன் படம் பார்த்ததால் எனக்கும் அதுபோல் படம் இயக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அந்த படத்தை முழு அனிமேஷன் படமாக இயக்கினால் நன்றாக இருக்கும் என்று ஆர்வம் ஏற்பட்டது. எனது விருப்பத்தை என் பெற்றோரிடம் தெரிவித்தேன். முதலில் மறுத்த அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால் கும்பகோணத்தில் வைத்து இதுபோன்ற படத்தை தயாரிக்க போதிய சூழல் இல்லாததால் சென்னைக்கு எனது தந்தை அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு தெரிந்த நண்பர்கள் உதவியுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். 2 மணி நேரம் கொண்ட இந்த படத்தை இயக்க 8 மாதங்கள் ஆனது.
அனிமேஷன் படம் என்றால் சிரிப்பு மற்றும் நல்ல கருத்துகள் தான் இருக்கும். ஆனால் அதில் சற்று மாற்றம் செய்து சினிமா படத்தை போன்றே இசை, பாடல்கள் என அனைத்தும் இந்த படத்தில் உள்ளன.
இந்த படமானது பள்ளியில் படிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும். அவர்களின் குறும்புத்தனங்கள் போன்றவற்றை கொண்டு மாணவர்கள் வீட்டிலும், பள்ளியிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சின்ன விஷயங்கள் கூட உண்மைத்தன்மை இருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது'' என்று பொறுப்பாக பேசிய அகஸ்தி, தன்னுடைய படத்தின் கதை பற்றி பகிர்ந்து கொண்டார்.
''கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் உள்ள இரண்டு நண்பா்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் முடிந்து, ஒரே நேரத்தில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறக்கிறது. அவர்கள் தங்களது மகன்களுக்கு குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் வைக்கின்றனர். ஆனால் இந்த பெயர்களால் பள்ளியிலும், கிராமத்திலும் அவர்கள் கேலிக்கு உள்ளாகிறாா்கள்.
இதனை அவர்கள் தங்களது தாயாரிடம் தெரிவிக்க, நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வந்தால் நிச்சயம் அனைத்தும் சரியாகி விடும் என்று அறிவுரை கூறுகின்றனர். இந்த நிலையில் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள பண்ணையார், செலவுக்கு பணம் கொடுத்து அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் வியாபாரி ஆகிய 3 பேர் குறித்தும் தெரிந்து கொள்கிறார்கள்.
அவர்கள் மோசடி செய்வதை அறிந்த பள்ளி மாணவர்கள் இருவரும் புத்திசாலித்தனமாக அவா்களிடம் இருந்து அனைத்தையும் மீட்டு கோவில் பூசாரியிடம் கொடுத்து விடுகின்றனர். இதனை அறிந்த பண்ணையார், மாணவர்கள் இருவரது தந்தையிடம் தெரிவித்து மிரட்டி விட்டு செல்கிறார். இந்த இரண்டு சிறுவர்களாலும் பாதிக்கப்பட்ட 3 பேரும் இவர்களை பழிவாங்க நினைக்கின்றனர். இதில் இருந்து அவர்கள் எவ்வாறு தப்பித்தனர் என்பதே படத்தின் மீதி கதை ஆகும்.
குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோர் பொறுமையாக அறிவுரை கூற வேண்டும், தண்டனை கொடுப்பது தீர்வாகாது என்ற கருத்தை வலியுறுத்தி குழந்தைகளுக்கு புரியும் வகையில், இயல்பாகவும் நேர்த்தியாகவும் இயக்கியுள்ளேன்.
இந்த படத்திற்கான கதையை எழுதும்போதே எனது தந்தை கார்த்திகேயன் பாராட்டினார். நான் நினைத்தபடியே 'எடிட்டிங்' சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தின் 2-டி அனிமேஷன் வேலைகளை தத்ரூபமான, நுணுக்கமான காட்சிகளை கண்களுக்கு விருந்து படைத்து படத்திற்கு உயிர் கொடுத்துள்ள தொழில்நுட்ப கலை ஞர்களுக்கு பாராட்டுக்கள்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.