< Back
ப்ளாஷ்பேக் 2024
2024-ல் அசாத்திய சாதனைகளை எட்டிய அறிவியல் துறை.. ஒரு பார்வை
ப்ளாஷ்பேக் 2024

2024-ல் அசாத்திய சாதனைகளை எட்டிய அறிவியல் துறை.. ஒரு பார்வை

தினத்தந்தி
|
19 Dec 2024 4:29 PM IST

ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ம் தேதி எல்-1 புள்ளியில் பூமிக்கும் சூரியனுக்கும் ஈர்ப்புவிசை சமமாக இருக்கும் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது.

2024-ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப்போகிறது. அறிவியல் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு திகழ்கிறது. அதில் மறக்க முடியாத சில நிகழ்வுகளை பார்ப்போம்.

இலக்கை அடைந்த ஆதித்யா எல்-1

ஜனவரி 6: செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப்பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், திட்டமிட்டபடி, சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளி-1 என்னும் எல்-1 புள்ளியில் பூமிக்கும் சூரியனுக்கும் ஈர்ப்புவிசை சமமாக இருக்கும் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்தது. சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பிய நாடுகளின் வரிசையில் அமெரிக்கா,ஜெர்மனி, ஐரோப்பாவை தொடர்ந்து 4-வது நாடாக இந்தியா இணைந்தது.

ஜனவரி 20: ஜப்பானின் ஏரோ ஸ்பேஸ் எக்ஸ்புளோரசன் நிறுவனம், 'ஸ்லிம்' எனப்படும் விண்கலத்தை நிலவில் தரை இறக்கி இருக்கிறது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 5-வது நாடாக ஜப்பான் மாறியது.

ஜனவரி 25: ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள மேக்னடோ மீட்டர் பூம் ஆய்வுக் கருவி, சூரியனின் ஹாலோ சுற்று வட்டப்பாதையில் உள்ள லாக்ரெஞ்ச் பாயிண்டில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அந்த கருவி 132 நாட்கள் விண்கலத்தில் இருந்தது. அதில் 2 உயர் துல்லியமான மேக்னோமீட்டர் சென்சர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை கிரகங்களுக்கு இடையேயான காந்தப் பண்புகளை அளவிட்டு ஆய்வு செய்கின்றன.

பிப்ரவரி 7: பனி சூழ்ந்த தனிக் கண்டமான அண்டார்டிகாவின் ராஸ் கடலோர பகுதியில் சீனா தனது 5-வது ஆராய்ச்சி மையத்தை கட்டி முடித்தது. இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு 'குயின்லிங்' என்று பெயரிடப்பட்டது.

குலசை ராக்கெட் ஏவுதளம்

பிப்ரவரி 28: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவை பெருமைப்படுத்தும் விதமாக ஆர்.எச்.200 என்ற சிறியவகை ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 100 கிலோ மீட்டர் வரை விண்ணுக்கு சென்று இலக்கை அடையும் திறன் கொண்டது. அந்த ராக்கெட் திட்டமிட்டபடி உயரத்தை அடைந்து பின்னர் கடலில் விழுந்தது.

பிப்ரவரி 16: இஸ்ரோ சார்பில் வடிவமைக்கப்பட்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோளின் பயன்பாடு நிறைவடைந்ததை தொடர்ந்து செயற்கைக்கோளை மீண்டும் பூமிக்கு கொண்டுவந்து கடலில் விழ வைக்க இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படிசெயற்கைக்கோளில் இருந்த எரிபொருளைப் பயன்படுத்தி புவி வட்டப் பாதையிலிருந்து கார்டோசாட்-2 விடுவிக்கப்பட்டு இந்திய பெருங்கடலுக்குள் விழவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 17: இந்தியாவுக்கான வானிலை தகவல்களை துல்லியமாக அறிந்து கொள்வதற்காக 'இன்சாட் 3 டி.எஸ்' செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா..

பிப்ரவரி 23: அமெரிக்கா 1972-ம் ஆண்டு அப்போலோ 17 விண்கலத்தை நிலவில் தரையிறக்கிய நிலையில், 50 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான 'இன்டியூட்டிவ் மிஷின்ஸ்' ஐ.எம்-1 எனும் விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கியது. இந்த விண்கலத்தில் உள்ள ஒடிஸியஸ் எனும் லேண்டர் பிப்ரவரி 15-ந் தேதி நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன்- 9 எனும் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை பெற்றது.

ஏப்ரல் 4 : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு விதமான ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அதிநவீன 'அக்னி பிரைம்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கும் திறன் கொண்டது.

மே 1: கடலில் 500 மீட்டர் ஆழத்துக்கு அடியில் திட ஹைட்ரேட் வடிவில் கார்பன் டை-ஆக்சைடை நிரந்தரமாக சேமித்து வைக்கலாம் என சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஆராய்ச்சி, தேசிய கார்பன் கட்டுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்ற இலக்குகளை இந்தியா அடைவதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டது.

நிலவில் தண்ணீர்

மே 1: நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் புரொபல்ஷன் ஆய்வகம், கான்பூர் ஐ.ஐ.டி. மற்றும் தன்பாத் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து விண்வெளி பயன்பாட்டு மைய இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் நிலவின் துருவங்களின் மேற்பரப்பில் காணப்படும் நீர் பனிக்கட்டியின் அளவைவிட மேற்பரப்பில் இருந்து இரண்டு மீட்டர் அடியில் பனிக்கட்டியின் அளவு 5 முதல் 8 மடங்கு பெரிதாக காணப்படுவதாகவும், வட துருவத்தில் இருக்கும் பனியின் அளவு, தென் துருவத்தை காட்டிலும் இருமடங்கு அதிகமாக இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மே 11: சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் டாக்சியை தயாரித்து வருகிறது. முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் இந்த டாக்சி 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த டாக்சி பறக்கவும், தரையிறங்கவும் 15 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. மேலும் இந்த டாக்சி 2 பேர் அமர்ந்து பயணம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மே 29: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ருத்ரா எம்-2' ஏவுகணை எதிரிகளின் பலவகை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். ஒடிசா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சுகோய்-30 எம்கே விமானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ஏவப்பட்டு, இதன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மே 30: இஸ்ரோவின் உதவியுடன் 'அக்னிகுல் காஸ்மோஸ்' எனும் நிறுவனம் சென்னை ஐ.ஐ.டி. உடன் இணைந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்துள்ளது. சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் வகையில் இந்த ஏவுதளம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் 'அக்னிபான் சார்டெட்' எனும் உலகின் முதல் 3டி அச்சடிப்பு தொழில்நுட்பத்தில் செமி கிரையோஜெனிக் ராக்கெட்டை வடிவமைத்தது. இது 300 கிலோ எடை கொண்ட விண்கலத்தை சுமந்து கொண்டு 700 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் தனியார் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஜூன் 25: நிலவின் தென் துருவத்துக்கு கடந்த மே மாதம் சாங்கே-6 என்ற செயற்கைக்கோளை சீனா அனுப்பியது. நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சோதனை செய்த அந்த விண்கலம், அங்கு சேகரித்த மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பியது.

புஷ்பக் ராக்கெட்

ஜூன் 23 : செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் சுமந்துசென்று விண்வெளியில் நிலைநிறுத்திவிட்டு, பூமிக்கு திரும்பி வரும் 'புஷ்பக்' என்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியது. இதன் 3-வது மற்றும் இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஜூன் 26: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 'பெர்வோ எனர்ஜி' எனும் நிறுவனம், பூமியின் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தது. இது அமெரிக்காவின் மிகப் பெரிய புவி வெப்ப மின்சார மேம்பாடாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக பூமியின் வெப்பத்தில் இருந்து 400 மெகாவாட் தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த மின்சாரம் கிட்டத்தட்ட 4 லட்சம் வீடுகளுக்கு போதுமானது ஆகும்.

ஜூலை 2: இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் எல்-1 புள்ளியைச் சுற்றி தனது முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை நிறைவு செய்தது.

ஜூலை 15 : இத்தாலிய விஞ்ஞானிகள் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில், 55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு குகை இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த குகை 130 அடி (40 மீட்டர்) அகலமும், பலநூறு மீட்டர் நீளமும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த குகையானது எதிர்காலத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தங்கி ஆய்வு செய்ய வசதியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தேசிய விண்வெளி தினம்

ஆகஸ்டு 12: சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய சாதனையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 23-ந் தேதியை 'தேசிய விண்வெளி தினமாக' மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 1-வது தேசிய விண்வெளி தினத்தையொட்டி 'நிலவைத் தொடும்போது உயிர்களைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்' என்ற கருப்பொருளுடன் கூடிய லோகோவை இஸ்ரோ வெளியிட்டது.

செப்டம்பர் 6: இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-4 ரக ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

செப்டம்பர் 26: இந்தியாவின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் அமைப்பு திட்டத்தின்கீழ், அறிவியல் ஆராய்ச்சிகளை எளிதாக்கும் வகையில் ரூ.130 கோடி செலவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பரம்ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

லடாக்கில் சோதனை

நவம்பர் 2: விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளியில் உள்ள தட்பவெப்பம் மற்றும் புறச்சூழல்களுக்கு இணையான இடத்தில் செய்யப்படும் 'அனலாக்' சோதனையை லடாக்கில் உள்ள லே பகுதியில் இஸ்ரோ தொடங்கியது. இதற்காக அங்கு விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விண்கலன் போன்ற 'ஹாப்-1' என்ற குடில் அமைக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 5: ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட ஓகல்டர் மற்றும் கொரோனாகிராப் என்ற 2 செயற்கைக்கோள்களை உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்