< Back
ப்ளாஷ்பேக் 2024
2024-ல் உயிர்ப்பலி வாங்கிய விமான விபத்துகள்
ப்ளாஷ்பேக் 2024

2024-ல் உயிர்ப்பலி வாங்கிய விமான விபத்துகள்

தினத்தந்தி
|
25 Dec 2024 3:19 PM IST

சிலி நாட்டின் ரான்கோ ஏரியில் பிப்ரவரி 6-ம் தேதி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியான் பினேரா உயிரிழந்தார்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் விமான போக்குவரத்து துறை சந்தித்த விபத்துகள் வருமாறு:

ஜனவரி 2: ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்திற்கு பயணிகளுடன் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்கும்போது ஜப்பான் கடலோர காவல் படையின் விமானம் மீது மோதியது. இதில் இரண்டு விமானங்களும் தீப்பற்றின. பயணிகள் விமானத்தில் இருந்த 367 பயணிகள், 12 ஊழியர்கள் என அவைரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால், கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். கேப்டன் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.

பிப்ரவரி 6: சிலி நாட்டின் ரான்கோ ஏரியில் பிப்ரவரி 6-ம் தேதி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியான் பினேரா உயிரிழந்தார். அவருடன் பயணித்த 3 பேர் உயிர்தப்பினர்.

பிப்ரவரி 9: புளோரிடாவின் கோலியர் கவுண்டியில் ஜெட் விமானத்தை, சாலையில் அவசரமாக தரையிறக்க முயன்றபோது வாகனம் மீது மோதி தீப்பற்றியது. இதில், பைலட்டுகள் இருவரும் உயிரிழந்தனர். மற்ற மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மார்ச் 12: ரஷியாவில் ராணுவ போக்குவரத்து விமானம், பெல்கோரட் அருகே விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீப்பற்றியதால் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த 15 பேரும் பலியாகினர்.

ஏப்ரல் 23: மலேசியாவின் லூமட் நகரில் கடற்படை தின ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், இரண்டு ஹெலிகாப்டர்களிலும் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர்.

ஜூலை 12: ரஷியாவில் லூகோவிஸ்டியில் இருந்து மாஸ்கோ வந்த சுகோய் சூப்பர்ஜெட் விமானம், அவசரமாக தரையிறங்கியபோது தரையில் மோதியது. இதில், விமானத்தில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.

ஜூலை 24: நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பொகாராவுக்கு புறப்பட்டுச் சென்ற சோதனை விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. 18 பேரை பலியாகிய இந்த விபத்தில், விமானி மட்டும் உயிர் பிழைத்தார்.

அக்டோபர் 21: சூடானில் துணை ராணுவத்தின் இலியுஷின் Il-76 என்ற விமானம் டார்பூரில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் பயணித்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 25: ஜெர்மனியின் லீப்சிக் நகரில் இருந்து லிதுவேனியாவின் வில்னியஸ் நோக்கி சென்ற சரக்கு விமானம், வில்னியஸ் நகரை நெருங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் அருகே விழுந்து நொறுங்கியது. இதில், விமான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

டிசம்பர் 18: அர்ஜென்டினாவின் ரிவர் பிளேட் கால்பந்து கிளப் தலைவருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. உருகுவேயின் பன்டா டெல் எஸ்டே பகுதியில் இருந்து அர்ஜென்டினாவின் சான் பெர்னாண்டோ விமான நிலையத்திற்கு வந்த விமானம், தரையிறங்கும்போது ரன்வேயை தாண்டிச் சென்று தரையில் மோதியது. இதில், விமானத்தில் இருந்த இரண்டு பைலட்டுகளும் உயிரிழந்தனர்.

டிசம்பர் 25: அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் பாகு நகரில் இருந்து ரஷியாவின் செசன்யா நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானது. பறவைகள் மோதியதால் விமானம் சேதமடைந்த நிலையில், கஜகஸ்தானின் அக்டாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. எனினும், விமான நிலையத்தை நெருங்குவதற்கு முன்பாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து தீப்பிடித்தது. 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்