< Back
ப்ளாஷ்பேக் 2024
2024ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய தேர்தல்கள் - ஒரு பார்வை
ப்ளாஷ்பேக் 2024

2024ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய தேர்தல்கள் - ஒரு பார்வை

தினத்தந்தி
|
24 Dec 2024 9:57 PM IST

2024ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய தேர்தல்கள் குறித்து இங்கு காண்போம்.

டெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையை கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மற்றும் அதன் முடிவுகள் குறித்த விவரத்தை இங்கு காண்போம்.

நாடாளுமன்ற தேர்தல்:

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

தேர்தல் தேதி , தொகுதி விவரம்:

முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 1 (102 தொகுதிகள்)

2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 26 (88 தொகுதிகள்)

3ம் கட்ட தேர்தல் - மே 7 (94 தொகுதிகள்)

4ம் கட்ட தேர்தல் - மே 13 (96 தொகுதிகள்)

5ம் கட்ட தேர்தல் - மே 20 (49 தொகுதிகள்)

6ம் கட்ட தேர்தல் - மே 25 (58 தொகுதிகள்)

7ம் கட்ட தேர்தல் - ஜுன் 1 (57 தொகுதிகள்)

தேர்தல் முடிவு தேதி:

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

இந்தியாவில் மொத்தம் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 49.72 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 47.15 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 48 ஆயிரம் பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேசிய ஜனநாயக கூட்டணி:

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றன.

இந்தியா கூட்டணி:

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், மார்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றன.

வாக்குப்பதிவு சதவீதம்:

7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 65.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வாக்கு எண்ணிக்கை:

7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டன.

பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகள்:

543 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் மத்தியில் ஆட்சிமைக்க 272 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

பாஜக கூட்டணி அபார வெற்றி:

தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்ட நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி அபார வெற்றிபெற்றது. பாஜக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில் பாஜக மட்டும் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்தியா கூட்டணி:

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்தியா கூட்டணி தேர்தலில் தோல்வியடைந்தது.

தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜக கூட்டணி:

பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து தொடர்ந்து 3வது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சியை கைப்பற்றியது.

3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி:

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து ஜுன் 9ம் தேதி நாட்டின் பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார்.

சட்டசபை தேர்தல்:

நாடாளுமன்ற தேர்தலை போன்றே 2024ம் ஆண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதன் விவரங்களை காண்போம்.

அருணாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்:

60 தொகுதிகளை கொண்ட அருணாச்சலபிரதேச சட்டசபைக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 2ம் தேதி எண்ணப்பட்டன.

பாஜக வெற்றி:

பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில் அருணாச்சலபிரதேசத்தில் 46 தொகுதிகளை பாஜக கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து அருணாச்சலபிரதேச முதல்-மந்திரியாக பிமா காண்டு பொறுப்பேற்றார்.

சிக்கிம் சட்டசபை தேர்தல்:

32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டசபைக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 79.77 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 2ம் தேதி எண்ணப்பட்டன.

கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி:

தேர்தலில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 தொகுதிகளை கைப்பற்றி கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து சிக்கிம் முதல்-மந்திரியாக பிரேம் சிங் தமாங் பதவியேற்றார்.

ஆந்திரா சட்டசபை தேர்தல்:-

175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டசபைக்கு மே 13ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 80.66 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டன.

தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி:

தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 164 தொகுதிகளை தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. 144 தொகுதிகளில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதையடுத்து ஆந்திராவின் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.

ஒடிசா சட்டசபை தேர்தல்:

ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 18 முதல் மே 7ம் தேதி வரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டன.

பாஜக வெற்றி:

ஒடிசாவில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 74 தொகுதிகள் தேவை. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக 78 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது. ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. இதையடுத்து, ஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்:

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டன.

ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி:

இந்த தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான கூட்டணி அபார வெற்றிபெற்றது. பெரும்பான்மைக்கு 48 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய நிலையில் 49 தொகுதிகளை ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றார்.

அரியானா சட்டசபை தேர்தல்:

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டன.

பாஜக வெற்றி:

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி அபார வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் அரியானாவில் பாஜக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, அரியானா முதல் - மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்:

ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் நவம்பர் 14ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் நவம்பர் 20ம் தேதியும் நடைபெற்றது.

ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின. ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் 1,211 பேர் வேட்பாளர்களாக களமிறங்கினர். இத்தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டன.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி:

இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றிபெற்றது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த கூட்டணி 56 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய நிலையில் 56 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றிபெற்றது. இதையடுத்து ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.

மராட்டிய சட்டசபை தேர்தல்:

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின. இந்த தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டன.

பாஜக கூட்டணி வெற்றி:-

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் மராட்டியத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றார்.

மேலும் செய்திகள்