2024ம் ஆண்டின் சிறந்த 10 தமிழ் படங்கள் எவை தெரியுமா?
|இந்த ஆண்டில் வெளியான தமிழ் சினிமாவில் சிறந்த டாப் 10 திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.
2024ம் ஆண்டில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டாப் 10ல் சிறந்த தமிழ் படத்திற்கான இடத்தை பிடித்துள்ள படங்களின் பட்டியல் இதோ..
1. லப்பர் பந்து:
கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் எளிய மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உணர்வுகளையும் கிரிக்கெட் பின்னணியில் கிராம வாழ்க்கையைக் கதைக் களமாக்கியிருந்தார் இயக்குநர். ஆண்களோடு சேர்ந்து ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்த்தும் இப்படம் தனிமனித ஈகோ, சாதிக்கு எதிரான அரசியல், ஆணாதிக்கம் ஆகியவற்றை தோலுரித்து காட்டியுள்ளது.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'.
22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டாவது தமிழ் சிறந்த திரைப்படம் விருது ரப்பர் பந்து படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு வழங்கப்பட்டது. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார் நடிகர் தினேஷ்.
2. மகாராஜா:
உலக திரைக்கதை பட்டியல்களில் 'நான் - லீனியர்' என்கிற, நேர்கோட்டில் சொல்லப்படாத திரைக்கதைகளுக்கென்று தனி ஒரு இடம் உண்டு. அந்த வகையில் இப்படம் அமைந்துள்ளது. நிகழ்வுகளைக் கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் திரைக்கதையாக்கமே 'நான் - லீனியர்' .
'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் 'மகாராஜா' படத்தை இயக்கி உள்ளார். கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வெளியான இத்திரைப்படம், வசூலில் ரூ.100 கோடியை நெருங்கி வருகிறது. சீனாவில் இதற்குமுன் வெளியான 'பாகுபலி 2' படம் ரூ.80.50 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது, சீனாவில் அதிக வசூலை ஈட்டிய முதல் தென்னிந்திய தமிழ் படம் என்ற பெருமையை 'மகாராஜா' படம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டிற்கான 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதை மகாராஜா படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார்.
3. அமரன்:
2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் 'அமரன்'.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இப்படம் இதுவரை சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் 'ஹே மின்னலே' என்ற வீடியோ பாடல் இதுவரை 2 கோடி பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜனை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் புகழ்பெற்ற முன்னாள் மாணவராக சித்தரிக்கும் அற்புதமான நடிப்பிற்காக சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் சிவகார்த்திகேயனை அழைத்து கவுரவித்துள்ளது.
22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது அமரன் படத்திற்காக நடிகை சாய் பல்லவி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறந்த படத்திற்கான விருது அமரன் படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு வழங்கப்பட்டது.
4. ஜமா:
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற யதார்த்தமான படம் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வெளியானது . தொடர்ந்து பெண் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் ஒரு கூத்துக் கலைஞனின் தொழில் வாழ்க்கை, தனி வாழ்க்கை இரண்டிலும் அவன் எதிர்கொள்ளும் புற, அகச் சிக்கல்களை அசலான தன்மையுடன் படமாக்கியிருந்தார் இயக்குநர் பாரி இளவழகன்.
'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. தன் தந்தை விரும்பி ஆடிய அர்ஜுனன் வேஷத்தை கதாநாயகன் கட்டினாரா என்ற கேள்விகளுக்குப் திரைப்படம் பதில் சொல்லியிருக்கிறது.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடல்களில் உண்மையான தெருக்கூத்து இசையைப் பயன்படுத்தியதால் படம் இயல்பாக வந்துள்ளது. பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்துள்ளார். இப்படத்தில்பாரி இளவழகன் , அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
5. மெய்யழகன்:
96 படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார், பழைய நினைவுகளைத் தொட்டு அதில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடும் கதையாக மெய்யழகனைக் கொண்டு வந்திருக்கிறார். தமிழும் நிலமும் உறவும் நினைவுமே படத்தின் மையம். விட்டுத்தர மனமில்லாத ரத்த உறவுகளை மன்னித்துக் கடந்து போய்விட வேண்டும் என்பதை படம் உணர்த்துகிறது. கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
நடிகர்கள் கார்த்தி , அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, ஜெயப்பிரகாஷ் என பலரும் தங்களுக்கான காட்சிகளில் மிகையில்லாத எதார்த்தமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'மெய்யழகன்' படத்திற்காக மக்களுக்கு பிடித்த நடிகர் என்ற பிரிவில் விருது வென்றார் நடிகர் அரவிந்த்சாமி.
6. நந்தன்:
கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளது. பட்டியலின மக்கள் அவர்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் அரசியல் அதிகாரம் பெறுவதற்கு ஆதிக்க சாதியினர் எவ்வாறெல்லாம் முட்டுக்கட்டைகளாக இருக்கிறார்கள் என்கிற கசப்பான கள உண்மைகளை தோலுரித்து காட்டியுள்ளது. ஆதிக்க சாதியினர், தங்களைச் சார்ந்து பிழைக்கும் பட்டியலின மக்களை எவ்வாறெல்லாம் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள், எதிர்ப்பவர்களை என்ன செய்வார்கள் என்பதை இயக்குநர் சரவணன் ஆதாரங்களுடன் பேசியுள்ளார்.
சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சமூகம் சார்ந்த சிறந்த படத்திற்கான விருது நந்தன் படத்திற்காக இயக்குனர் இரா. சரவணனுக்கு வழங்கப்பட்டது.
7. வாழை:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியான திரைப்படம் 'வாழை'. இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம். விளைந்த வாழைத் தார்களை மிகக் குறைவானக் கூலிக்கு வலியுடன் சுமந்தபடி, நீண்ட தூரம் வரப்புகளில் நடந்து கரை நோக்கி வந்தும் வாழ்க்கையில் கரையேற முடியாத கூலித் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ளார் இயக்குனர்.
22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்பெஷல் ஜூரி விருது வாழை படத்திற்காக மாரி செல்வராஜிற்கு வழங்கப்பட்டது.
8. போகுமிடம் வெகு தூரமில்லை:
தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு நடுவே, சக மனிதனின் பிரச்சினைக்குத் தம்மால் தீர்வளிக்க முடியும் என்றால் அதைச் செய்யத் துணிவதுதான் மனிதம். அதை திரைக்கதையாக உருவாக்கி, சினிமாவை அணுகியுள்ளார் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா.
நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், 'போகுமிடம் வெகுதூரமில்லை'. இந்த படத்தில் மெரி ரிக்கெட்ஸ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிறிய வாழ்க்கைப் பயணத்தில் நாம் சென்றடைய வேண்டிய தூரம் மரணமல்ல, 'மனிதம்' என்பதைக் கண்டடையும்போது, அது மகத்தான தருணங்களை உள்ளடக்கிய பயணமாகிவிடுகிறது. அதை வாழ்க்கைக்கு நெருக்கமான கதாபாத்திரங்கள் மூலம் விறுவிறுப்பாக விரித்து நம் மனதை வரித்துக் கொள்கிறது இந்தப் படைப்பு.
இந்த படத்தில் விமல் அமரர் ஊர்தி ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கருணாஸ் கூத்துக் கலைஞராக நடித்துள்ளார்.
9. கோழிப் பண்ணை செல்லத்துரை
தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை' 'மாமனிதன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ள, இப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு துயரமானது என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளார் இயக்குனர். "உறவுகளின் மேன்மையை, அன்பைச் சொல்லும் திரைப்படம்" என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் இது பெற்றுள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற 10 வது டாப் இண்டி திரைப்பட விருது எனும் பன்னாட்டு திரைப்பட விழாவில் 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தில் நடித்த சத்யா தேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் விருதுகளுக்கு நாமினேஷன் என்ற தகுதியை பெற்றது. ஸ்பெயின் நாட்டில் 36 வருடமாக நடந்து வரும் பாரம்பரிய ஜிரோனா திரைப்பட விழாவில் சிறந்த படமாக இயக்குனர் சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லதுரை' தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக ஒரு தமிழ் திரைப்படம் இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10. தங்கலான்:
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் 'தங்கலான்'. இதில், விக்ரமுடன், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கால்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்தனர். கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக இது அமைந்துள்ளது.