சாதனைகளும் சர்ச்சைகளும்..! 2024 பாரீஸ் ஒலிம்பிக் ஒரு பார்வை
|33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.
பாரீசில் இந்த வருடம் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் - வீராங்கனைகளின் சாதனைகள், இந்த தொடரில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து ஒரு ரீவைண்ட் இங்கு காணலாம்...!
பாரீஸ் ஒலிம்பிக்:-
33-வது ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்றது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. சீனா 2-வது இடத்தையும், ஜப்பான் 3-வது இடத்தையும் பிடித்தன.
இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71-வது இடத்தை பிடித்தது. ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா முதலிடம் பிடிப்பது, இது 19-வது முறையாகும். இந்தியாவில் இருந்து 117 வீரர் - வீராங்கனைகள் சென்றனர். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த 11 பேர் அடங்குவர்.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் இந்திய வீராங்கனையாக மாபெரும் சாதனை படைத்த மனு பாக்கர்:-
இந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் முதல் பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவின் பதக்க வேட்டையை ஆரம்பித்து வைத்தார். பெண்களுக்கான துப்பாக்கி சுடுதலின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப்பதக்கமும், கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத்சிங் உடன் இணைந்து மற்றொரு வெண்கலப்பதக்கமும் வென்று அசத்தினார்.
இதன் மூலம் 124 ஆண்டுகால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
தொடர்ந்து 2-வது வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணி:
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணியும், ஸ்பெயின் அணியும் மோதின. அதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
வெண்கலம் வென்ற கையோடு இந்திய ஆக்கி அணியின் கோல் கீப்பர் ஓய்வை அறிவித்தார்.
ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற 'தங்கமகன்' நீரஜ் சோப்ரா:
பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா, 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்துக்கு வீசி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் வென்றார்.
மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்:-
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் ஆண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13-5 என்ற புள்ளி கணக்கில் போர்டோரிகோ வீரர் டேரியன் குருசை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலே:-
துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் எடை சர்ச்சை:
இந்த ஒலிம்பிக் தொடரில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் 100 கிராம் எடை பிரச்சினைதான். பெண்கள் மல்யுத்தத்தில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களம் இறங்கினார். முதல் சுற்றில் உலக சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான ஜப்பானின் யு சுசாகிக்கு அதிர்ச்சி அளித்தார். சர்வதேச போட்டிகளில் 82 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட சுசாகியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் வினேஷ் போகத் ஈர்த்தார்.
தொடர்ந்து கால்இறுதியில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் உக்ரைனின் ஒக்சானா லிவாச்சையும், அரைஇறுதியில் 5-0 என்ற கணக்கில் பான்அமெரிக்க சாம்பியன் கியூபாவின் லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனையும் போட்டுத் தாக்கி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்த அவருக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டுபிரான்டுவை சந்திக்க இருந்தார்.
ஒரே நாளில் 8 மணி நேர இடைவெளியில் 3 வீராங்கனைகளுடன் மல்லுக்கட்டிய வினேஷ் போகத் இதற்காக கடுமையான உடல் உழைப்பை வழங்கியதால் தளர்ந்து போனார். இதனால் அவ்வப்போது நிறைய சத்தான மற்றும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அவருக்கு திடீர் பிரச்சினையாக உடல் எடை கூடியிருப்பது இரவில் கண்டறியப்பட்டது.
வினேஷ் போகத் வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடக்கூடியவர். இந்த முறை அந்த பிரிவுக்கு வேறு ஒரு இந்தியர் தகுதி பெற்றதால் அவர் 50 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினார். இதற்காக கஷ்டப்பட்டுதான் உடல் எடையை குறைத்தார். தொடர்ந்து அதே 50 கிலோ உடல்எடையை தக்கவைக்க உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.
இரவு போட்டிகள் முடிந்த பிறகு பரிசோதித்து பார்த்ததில், அவரது உடல் எடை 2 கிலோ வரை அதிகரித்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய உடல் பயிற்சியில் ஈடுபட்டார். உணவோ, தண்ணீரோ எடுத்துக் கொள்ளாமல் தொடர்ச்சியாக ஓட்டம், சைக்கிளிங், ஸ்கிப்பிங், ஆவி குளியல் என்று உடல் எடையை 50-க்குள் கொண்டு வருவதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் பயிற்சி நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொண்டார். இதனால் கணிசமாக எடை குறைந்தது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அவருக்கு வழக்கமான நடைமுறைப்படி உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர் நிர்ணயித்த 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமிருப்பது தெரியவந்தது. எடையை குறைக்க டாக்டர்களின் அறிவுரைப்படி நீளமான முடியை கூட வெட்டி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை.
இதையடுத்து கொஞ்சம் கால அவகாசம் தரும்படி இந்திய தரப்பில் கேட்கப்பட்டது. அதை நிராகரித்த ஒலிம்பிக் கமிட்டியினர், விதிமுறைக்கு புறம்பாக வினேஷ் போகத்தின் எடை இருப்பதால் அவரை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தனர். இதன் மூலம் அவரது பதக்கம் வாய்ப்பு பறிபோனது.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனையை படைக்கும் முனைப்புடன் தயாராகி வந்த வினேஷ் போகத்துக்கு, இந்த தகவல் பேரிடியாக விழுந்தது. ஏமாற்றத்துடன், கண்ணீரில் நிலைகுலைந்து போனார். மேலும் மல்யுத்த போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் கண்ணீருடன் அறிவித்தார்.
இதன்பின் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தற்போது அரியானா மாநில ஜூலானா சட்டப்பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிப்:
இந்த ஒலிம்பிக் தொடரின் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிப், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.
முன்னதாக 66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. முதல் ரவுண்டில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.
தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார். இதையடுத்து இமானே கெலிப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இமானே கெலிப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. இதனால் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்பாக அவர் தகுதி நீக்கப்பட்டார். அதன்பின் இந்த தடைகளை தாண்டி அவர் ஒலிம்பிக்கில் தடம் பதித்தார்.
தற்போது பல தடைகளை தாண்டி அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.
கூடுதல் அழகு காரணமாக ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நீச்சல் வீராங்கனை:
பராகுவேவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலான்சோ. 20 வயதாகும் இவர், ஒலிம்பிக் தொடரின் நீச்சல் பிரிவில் 100 மீ பட்டர்பிளை போட்டியில் பங்கேற்றார். அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை 0.24 நொடிகளில் தவறவிட்டார். இதன் மூலம் லுவானா அலான்சோவின் ஒலிம்பிக் பயணம் முடிவுக்கு வந்தது.
விளையாட்டு வீரர்கள் போட்டிகள் முடிவடைந்தாலும், ஒலிம்பிக் கிராமத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக லுவானா ஒலிம்பிக் கிராமத்திலேயே தங்கி சக போட்டியாளர்களின் போட்டிகளை கண்டு ரசித்து வந்துள்ளார்.
அப்படி சக நாட்டு வீரர்களுடன் தங்கியிருந்த லுவானா அலோன்சோ, தன்னுடைய அதிகப்படியான அழகால் மற்றவீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறார் என்று சொந்த நாட்டினாலேயே நாட்டிற்கு திரும்பும்படி லுவானா கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியது.
லுவானா அலான்சோவின் அழகு சக வீரர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
உண்மையில் அதிகப்படியான அழகுடன் இருந்ததுதான் காரணமா என்ற கேள்வி எழும் நிலையில், "அவர் வீரர்களை உற்சாகப்படுத்துவதை விடுத்து, தனது சொந்த விருப்பங்களுக்காக யாருக்கும் தெரியாமல் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேறி வெளியில் சுற்றினார்" அதனாலயே அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் கோபமடைந்த லுவானா அலான்சோ, நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அதிரடியாக அறிவித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா:-
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் முடிவுக்கு வந்தது. இந்த விழாவில் பிரபல அமெரிக்க நடிகர் டாம் குரூஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பிரான்சில் பாரீஸ் நகருக்கு வெளியே புறநகர் பகுதியில் அமைந்த ஸ்டேட் டி பிரான்ஸ் என்ற அந்நாட்டின் தேசிய ஸ்டேடியத்தில் நிறைவு விழா நடைபெற்றது.
அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் ஆக்கி வீரர் ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
பாரா ஒலிம்பிக்:
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
பதக்க பட்டியலில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என்று 29 பதக்கங்களுடன் 18-வது இடத்தை பிடித்தது. பாரா ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா அதிக அளவு பதக்கங்களை வென்று சாதனை படைத்து இருந்தது. கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்று இருந்தது. அதுவே வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கமாக இருந்தது. அந்த எண்ணிக்கையை இந்த முறை முந்திய இந்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.
பாரா ஒலிம்பிக்கில் அசத்திய தமிழர்கள்:
இந்த தொடரில் தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவுக்காக பங்கேற்ற வீரர் - வீராங்கனைகளில் 4 பேர் பதக்கம் வென்று அசத்தினர்.
பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கமும் , மனிஷா ராமதாஸ் மற்றும் நித்திய ஸ்ரீ சிவன் வெண்கல பதக்கமும் வென்றனர்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.
பரிசுத்தொகை அறிவிப்பு:
பாரா ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்தது.
அதன்படி தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது. மேலும் அணிகள் பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.22.5 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது.