தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
|தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து, வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடந்த 11-ம் தேதி மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், திருச்சி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவானது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் அடுத்தடுத்து உருவாகி வட மாநிலங்களை நோக்கி செல்கின்றன. இதனால், அங்கு தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. தவிர, வழக்கமாக காற்று வீசும் திசையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதனால், வானில் மேகங்கள் உருவாவது குறைந்து, தமிழகத்தில் மழை வாய்ப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு வட மாநிலங்களில் பருவமழை தீவிரமாக இருக்கும். அதேநேரம், தமிழகத்தில் வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும்" என்றார்.