குஜராத்தில் நாளை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
|குஜராத்தில் நாளை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் இயல்பை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. செப்டம்பர் மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த மாதம் நாடு முழுவதும் மழை பெறும் வாய்ப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் நாளை முதல் 4ம் தேதி வரை மீண்டும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (செப்.2ம் தேதி) வதோதராவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருகிலுள்ள பருச் மற்றும் நர்மதா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய குஜராத்தை ஒட்டிய சவுராஷ்டிராவில் அகமதாபாத் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்.4ம் தேதி ஆனந்த் மற்றும் பருச் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தெற்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி 12 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கிறது. சமீபத்திய பருவ மழையில் சிலநாட்களுக்குள்ளேயே குஜராத் அதன் ஆண்டு சராசரியை விட 105 சதவீதம் அதிகமாக பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பெய்த கனமழையால் குஜராத் மாநிலத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். குஜராத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினைத் தொடர்ந்து மாநில அரசு பல்வேறு பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.