மராட்டியத்தில் கனமழை.. மும்பைக்கு ரெட் அலர்ட் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
|மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை, புனே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதாவது, ஒரே நேரத்தில் 200 மிமீ மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
மேலும், தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியதால் சில ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. தொடர் மழையால் முத்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புனேவில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, குஜராத் மற்றும் மராட்டியத்தில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மும்பை நகருக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.