கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
|கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது.
கனமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் ராணுவம், போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக, இன்று காலை முதல் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் இன்று மழை குறைந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு, காசர் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 5-ந்தேதி வரை கேரள மாநிலம் முழுவதும் பரவலாக மழை பொழிவு காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.