3 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
|சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3 மாவட்டங்களில் நாளை( ஞாயிற்றுக்கிழமை) மிக கனமழைக்கும், 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கும், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (ஆக.19ந் தேதி) கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்லில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
வரும் 20-ம்தேதி முதல் 23-ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.