< Back
வானிலை
இந்த ஆண்டின் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப்படம்

வானிலை

இந்த ஆண்டின் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
29 Aug 2024 10:41 AM IST

நாளை காலை புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோர பகுதியை அடுத்த 2 தினங்களில் நெருங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்தியக் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இந்நிலையில் இந்தாண்டின் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலை அடைந்து, நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் புயலாக வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் இந்திய கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வங்க கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், இந்தாண்டின் இரண்டாவது புயலாக இது உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா (ASNA) என பெயரிடப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்