தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
|தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் 12-ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
14ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் தர்மபுரி உள்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.