தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
|சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.
இதற்கிடையில் மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது. இதுமேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.