மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே? - செங்கல்லை ஏந்தி தமிழக எம்.பி-க்கள் போராட்டம்
|மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
காலை 11 மணியளவில் மக்களவையில் 2023-24க்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சுமார் 90 நிமிடங்கள் வாசித்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல் ஏந்தி, நிர்மலா சீதாராமனை கண்டித்து தமிழ்நாட்டு எம்.பிக்களான மாணிக்கம் தாக்கூர், கார்த்தி சிதம்பரம், விஜய்வசந்த், செல்லக்குமார், ஞானதிரவியம், சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015- ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடர்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதில் தாமதம் நீட்டித்து வருகின்றது.