பட்ஜெட் தாக்கலை பார்க்க வந்த நிதி மந்திரியின் குடும்பம்
|நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுவதை நேரில் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-வது முறையாக நேற்று முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும்.
அவர் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றுவதை நேரில் பார்த்து மகிழ்வதற்காக அவரது மகள் வாங்மயி பரகலா மற்றும் குடும்ப உறவினர்கள் வந்திருந்தனர்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலுக்காக கருப்பு மற்றும் தங்க நிற பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவை அணிந்து வந்திருந்தார்.
மத்திய பட்ஜெட் கையடக்க மடிக்கணினி வாயிலாக தாக்கல் செய்யப்பட்டதால் அதை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழக்கம்போல சிவப்பு நிற பையில் எடுத்து வந்தார்.
ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பலரும் மக்களவைக்கு வந்திருந்து பட்ஜெட் உரையின்போது குறிப்புகள் எடுத்தனர்.
பட்ஜெட்டையொட்டி நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடம் நிரம்பி வழிந்தது.