ஓராண்டாக பாலியல் தொல்லை; மார்க்கை குறைத்து போடுவேன் மாணவிகளிடம் மிரட்டல்..சிக்கிய தலைமை ஆசிரியர்
|சேலம் அருகே தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளியில் தலைமை ஆசிரியராக மேட்டூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார் .
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் விஜயகுமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இதுபற்றி புகார் தெரிவித்தனர் .
இதையடுத்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று புகார் கொடுத்தனர். மேலும் ஒரு சில மாணவிகளின் உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து தலைமையாசிரியர் விஜயகுமாரை தாக்க முயன்றனர். இதனால் பள்ளியில் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த டிஎஸ்பி சங்கீதா, ஓமலூர் போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்ததில் மாணவிகளுக்கு கடந்த ஓராண்டாக தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது .
மேலும் பள்ளி ஊழியர்களை சாதி பேரைச் சொல்லி அவர் அழைத்து வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே அங்கு திரண்ட மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் அவர்கள் தலைமை ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது போக்சோ உள்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.