< Back
தலைப்புச் செய்திகள்
காவேரி மருத்துவமனையின், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை துறையின் இயக்குனர் மற்றும் மூத்த மருத்துவருமான ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா

மருத்துவர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா

தலைப்புச் செய்திகள்

சுவாசமே...! சுவாசமே...!! – நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
6 July 2022 5:15 PM IST

புகைபிடித்தலை தவிர ஒருவருக்கு காற்றின் மாசு மூலமாகவும் நுரையீரல் பாதிக்கப்படலாம். மேலும், காற்றோட்டம் இல்லாத இடத்தில்...

னிதனுக்கு உயிர் வாழ மூச்சு அவசியம். மூச்சு என்பது சுவாசம். சுவாசம் நம் உடலில் நடைபெற நமக்கு அவசியமான முக்கிய உறுப்பு நுரையீரல். இந்த நுரையீரல் செயலிழந்து ஒருவருக்கு சுவாசம் முழுமையாக நடைபெறாத பொழுது அவருக்கு ஆக்சிஜன் வெளியிலிருந்து கொடுக்கப்படுகிறது. அப்படிக் கொடுக்கப்படும் நிலையிலுள்ள நோயாளிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போல மாற்று நுரையீரலும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட முடியும் என்பது நம்பிக்கை அளிக்க கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றிய நம் கேள்விகளுக்கு மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கம் அளித்தார் காவேரி மருத்துவமனையின், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை துறையின் இயக்குனர் மற்றும் மூத்த மருத்துவருமான ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா அவர்கள். அவரின் பேட்டி கட்டுரை கீழ்வருமாறு,

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் பற்றி கூறுங்கள் டாக்டர்?

நுரையீரல் என்பதை ஒரு மரம் போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் அடித்தண்டு தான் நம்முடைய மூச்சுக்குழல். மரம் மேலும் 2 கிளையாக பிரிவதுபோல் நுரையீரலின் பிரியும் கிளைகள் தான் 'ப்ரான்கை'. இந்த கிளைகள் மேலும் மெல்லியதாக பிரிந்து 'ப்ரான்கியோலஸ்' ஆகி அதன் கடைசி பகுதியில் இலைகள் இருப்பது போல நம் நுரையீரலின் கடைசி பகுதியில் இருப்பது தான் 'ஆல்வியோலை' என்ற பை போன்ற நுண்ணிய பகுதி. இங்கு தான் ரத்தக்குழாயில் உள்ள கார்பன் டை ஆக்சைட் அகற்றப்பட்டு காற்றில் உள்ள ஆக்சிஜென் ரத்தத்தில் சேர்க்கப்படுகிறது. இப்படித்தான் நம் உடல் செயல்பாடுகளுக்கு தேவையான பிராணவாயு இயக்கம் நடைபெறுகிறது.

எனவே இப்படிப்பட்ட அத்தியாவசியமான ஒரு உறுப்பு பாதிக்கப்படும் பொழுது அந்த மனிதனின் வாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்து போகிறது. வெளியிலிருந்து பிராணவாயுவை உடலுக்குள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. நுரையீரல் செயல் இழப்பு ஏற்படும்போது அது கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது ஒரேடியாகவோ ஏற்படலாம்.

அப்படி ஏற்படும்பொழுது தேவைக்கேற்ப ஆக்சிஜன் நேரடியாக உடலுக்கு கொடுக்கப்படுவதே சிகிச்சையாக இருக்கிறது. இந்த நிலையில்தான் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒருவரின் உயிரை காப்பாற்றி அவரை இயல்பாக சுவாசிக்க வைக்க உதவுகிறது.

இந்த அறுவை சிகிச்சை ஒரு மனிதரின் நுரையீரல் செயல் இழந்த பின்பு செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சையாகும். சிறுநீரகம் செயல் இழந்து டயாலிசிஸ் செய்யப்படும் ஒரு நோயாளிக்கு எப்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறதோ அதேபோல் நுரையீரல் செயலிழந்து ஒருவருக்கு பிராணவாயு பைபாஸ் செய்து கொடுக்கப்படும் பொழுது, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒருவருக்கு செய்யப்பட்டு அவரின் உடல் அதை ஏற்றுக்கொண்டு பூரண குணமாகி வந்துவிட்டால் அறுவை சிகிச்சை நடந்த ஓராண்டிற்குள் அவர் இயல்பு முறையில் சுவாசம் செய்ய முடியும்.

கே: ஒருவருக்கு நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

ப: நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணம் புகைப்பிடித்தல் தான். புகை பிடிப்பது, புகையிலை போடுவது போன்ற பழக்கங்களினால் தான் பெரும்பாலும் நுரையீரல் செயலிழப்புக்கு ஆளாகிறது அதேபோல் வீட்டில் ஒருவர் புகை பிடிக்கும் பொழுது அங்கு இருக்கும் குழந்தைகளும் (பாசிவ் ஸ்மோக்கிங் என்ற முறையில்) புகையை சுவாசிக்கிறார்கள். 8 வயது வரை ஒரு குழந்தைக்கு நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில், அப்பொழுது அவர்கள் சுவாசிக்கும் புகை அவர்களுடைய நுரையீரலை பாதித்து, 20, 30 வயதுகளில் அவர்களுக்கு பிரச்சினை வெளிப்படுகிறது.

புகைபிடித்தலை தவிர ஒருவருக்கு காற்றின் மாசு மூலமாகவும் நுரையீரல் பாதிக்கப்படலாம். மேலும், காற்றோட்டம் இல்லாத இடத்தில் விறகு அடுப்பில் அதிகம் சமைப்பவர்கள், நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்பவர்கள், மண் குவாரி போன்ற இடங்களில் வேலை செய்பவர்கள், பஞ்சு ஆலை போன்ற மில்களில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு அடுப்புப்புகை , கரித்தூள், மண், பஞ்சு போன்றவற்றை சுவாசிப்பதால் அவர்களின் நுரையீரல் பாதிக்கப்பட்டு செயலிழப்பு ஏற்படலாம்.

கே: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சில பேருக்கு இதயமும் சேர்த்து மாற்றப்படுவது ஏன்?

ப: நம் நுரையீரல் இதயத்துடன் கூட்டாக சேர்ந்து மிக அழகாக இயங்குகிறது. இதயத்தின் வலது புறத்தில் இருந்து வரக்கூடிய அசுத்த ரத்தத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை நுரையீரல் நீக்கி ஆக்ஸிஜன் சேர்ந்த சுத்த ரத்தத்தை இதயத்தின் இடது புறத்திற்கு அனுப்புகிறது. இதயம் இடது புறத்திலிருந்து உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்கிறது. எனவே நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள் இதயத்தையும் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகள் நுரையீரலின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. நுரையீரலில், ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகமாகும்போது (பல்மனரி ஹைபர்டென்ஷன்) அது இதயத்தின் வலது பக்கத்தை பெரிதும் பாதிக்கிறது. இதயத்தின் வலது பக்கத்திலிருந்து நுரையீரலுக்கு அசுத்த ரத்தம் எடுத்துச் செல்லப்படுவதால் நுரையீரலின் ரத்த குழாயில் ஏற்படும் அழுத்தம் இதயத்தை பாதிக்கிறது. அதேபோல் இதயத்தில் பாதிப்பு இருக்கும் பொழுது அதன் விளைவாக நுரையீரல் பாதிக்கப்படுவதும் ஏற்படலாம். இந்த மாதிரி சூழலில் நுரையீரல் மற்றும் இதயத்தை சேர்த்தே மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு நுரையீரல் மட்டுமோ இரண்டு நுரையீரலும் சேர்ந்தோ அல்லது இரண்டு நுரையீரல் மற்றும் இதயம் சேர்ந்தோ செய்யப்படுகிறது.

கே: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை எப்பொழுதில் இருந்து செய்யப்பட்டு வருகிறது?

ப : உலக அளவில்1983-ஆம் ஆண்டில் தான் முதல் முதலில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதில் 2016ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் பெரும்பான்மையான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது என்று கூறலாம். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே சென்னையிலும் ஹைதராபாத்திலும் தான் செய்யப்பட்டு வருகிறது.

வருடத்திற்கு கிட்டத்தட்ட 120 முதல் 150 அறுவை சிகிச்சைகள் சென்னையிலும் ஐதராபாத்திலும் செய்யப்படுகிறது.

கே: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை அபாயகரமானதா??

: இந்த அறுவை சிகிச்சையில் அபாயம் எதுவும் இல்லை. இந்த அறுவை சிகிச்சையை பொருத்தவரை இது ஆபத்தில்லாத சுலபமான சிகிச்சை முறைதான். ஆனால் நோயாளியின் உடல்நிலை மிகவும் பலவீனமாக இருக்கும் பொழுது செயற்கை நுரையீரலை உடல் ஏற்றுக் கொண்டு தேறுவதற்கு கடினமாக இருக்கலாம். ஒருவர் குறைவான ஆக்ஸிஜன் கொண்டு அவர் தன் வேலையை செய்து கொள்ளும் நிலையில் நடமாடிக் கொண்டிருக்கும் போதே, அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிந்தால், அவருடைய உடல் வேகமாக நல்ல முறையில் தேறி விரைவாக அவர் சுயமாய் சுவாசிக்க ஆரம்பித்து விட முடியும். இன்றைய நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் விளைவாக இந்த அறுவை சிகிச்சை 90% வெற்றி வாய்ப்பை அளிக்கிறது.

கே: யாருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது?

ப: நோயினால் நுரையீரல் முழுவதுமாக செயலிழந்து போகும் பொழுது அவருக்கு வெளியில் இருந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. நுரையீரல் பாதிப்படையும் நபர்களுக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டி இருக்கிறது. அம்மாதிரியான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு முதலில் குறைவாக தேவைப்படும் ஆக்சிஜன், மேலும் அவருடைய நிலைமை மோசமாகும் போது கூடுதலான அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படலாம். ஒரு கட்டத்தில் நுரையீரலின் செயல்பாடு முழுவதுமாய் குறைந்து விட்டால் வெளியிலிருந்து ஆக்சிஜென் கொடுத்தாலும் அதை உடல் எடுத்துக் கொள்ளாது. இந்த மாதிரி நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும் நிலையில் உள்ளோருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. நுரையீரல் முழுவதுமாய் செயல் இழந்து வெண்டிலேடர் அல்லது எக்மோவில் உள்ள நோயாளிகளை விட ஆரம்பக்கட்டத்திலேயே அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நல்ல முறையில் குணமாகி வாழலாம்.

கே: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான நுரையீரல் எங்கிருந்து பெறப்படுகிறது

ப: மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளியின் குடும்பம் அவரது நுரையீரலை தானம் செய்ய முன்வந்தால் தான் நுரையீரல் கிடைக்கும். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்துள்ள நோயாளிகளின் பட்டியல் இருக்கும். அந்த நேரத்தில் விபத்தினாலோ வேறு ஏதாவது நோயினாலோ ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு அவருடைய உறவினர்கள் அவருடைய உறுப்புகளை தானம் கொடுக்க முன்வரும் பட்சத்தில், ஒருவரின் நுரையீரலை அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளி பட்டியலில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்டு, அந்த மருத்துவமனையில் இருந்து ஒரு குழு நுரையீரலை சோதித்து அது பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் அதை உடனடியாக எடுத்துவந்து நுரையீரல் தேவைப்படும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. இந்த செயல்முறை அனைத்துமே 6 முதல் 8 மணி நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். மூளைச்சாவு ஏற்படும் நபர் அவரின் நுரையீரல் விபத்து போன்ற ஏதேனும் காரணங்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, வெண்டிலேடரில் இருப்பதினால் அவருடைய நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருந்தாலும், அந்த நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது. ஆனால் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 900 முதல் 1000 பேர் மூளைச்சாவு ஏற்பட்டு உடல் தானத்திற்கு முன்வருகிறார்கள். இதில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே நுரையீரல் செயலிழந்தவர்களுக்கு பொருத்தப்படுகிறது. இதற்கு காரணம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியான நோயாளிகள், நுரையீரல் முழுவதுமாக செயலிழந்த பின்பே மாற்று சிகிச்சை அறுவை சிகிச்சைக்கு வர விரும்புகிறார்கள். ஓரளவிற்கு அவர்களுடைய நுரையீரல் வேலை செய்யும் பொழுதே அவர்கள் இந்த சிகிச்சைக்கு முன் வந்தார்களானால் அவர்களின் அறுவைசிகிச்சைக்கு பின்பான ஆரோக்கியம் மேம்படும் என்பதும் அவர்களுடைய ஆயுளும் நீட்டிக்கப்படும் என்பதும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

கே: இந்த அறுவை சிகிச்சைக்கு அதிகமான அளவில் செலவு ஏற்படுமா?

ப: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது பொதுவாக கல்லீரல்(லிவர்) மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு எவ்வளவு செலவீட்டை சந்திப்பீர்களோ அதே அளவிற்கு தான் இதற்கும் ஆகும். நுரையீரல் செயலிழப்பு ஆரம்பக்கட்டத்தில் இருந்து, நல்ல நிலையில் நடமாடிக் கொண்டிருக்கும் நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை நாங்கள் அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலமும் எங்கள் மருத்துவமனையில் செய்கிறோம். இந்த கட்டுரையை படித்த பிறகு நோயாளிகளின் சந்தேகங்கள் நீங்கி, எங்களிடம் வந்து எங்களின் சேவைகளை பெற்று பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.

மேலும் செய்திகள்