இந்த சின்ன பையன் இனி என்ன செய்வான் என்று பாருங்க... ஆர்.எஸ்.பாரதிக்கு சவால் விடுத்த அண்ணாமலை
|ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பேசியதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததில்லை. ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது.
சீனியரான மனிதர் ஒருவர், திராவிட முன்னேற்ற காலம் முடிவிட்டதன் காரணமாக, அவருடைய வாயில் இந்த பேச்சுக்கள் வர ஆரம்பித்து விட்டது. ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். அவரிடம் 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ளோம். ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன். தி.மு.கவினர் திட்டி திட்டி அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. பயந்து போய் சாமானிய மக்கள் தி.மு.க.வை எதிர்ப்பது இல்லை. இதில், நாங்கள் நிச்சயமாக ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவோம்.
என்னை சின்னப் பையன் என்று கூறிய ஆர் எஸ் பாரதி இப்போது இந்த வழக்கின் மூலம் நான் யார் என்பதை புரிந்து கொள்வார். ஆர்.எஸ்.பாரதியின் ராசியான கைரேகையை இந்த சின்ன பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்க போகிறீர்கள். கண்டிப்பாக அவர் தண்டிக்கப்படுவார். நாய்கூட பி.ஏ. படிக்கிறது என்று அவதூறாக அவர் பேசியதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
சிபிஐ விசாரித்தால்தான் டாஸ்மாக் ஊழல் வெளிவரும். மடியில் கனம் இருப்பததால்தான் சி.பி.ஐ. உள்ளே வரக்கூடாது என முன் அனுமதியை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் விஷயத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என திருமாவளவனே கூறுகிறார். இதில் முதல்-அமைச்சர் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக இருப்பதன் மர்மம் என்ன? " என்று அவர் கேள்வி எழுப்பினார்.