இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி!
|ஜம்முவில் 43 தொகுதிகளுக்கும், காஷ்மீரில் 47 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
சென்னை,
எப்போதுமே பயங்கரவாதிகளால் அல்லல்பட்டுக் கொண்டிருந்த காஷ்மீர், சமீப காலமாக அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடைசியாக ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த நேரத்தில் 2014-ல் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், பா.ஜனதா கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சியை அமைத்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான முப்தி முகமது சையது முதல்-மந்திரியானார். 2016-ல் அவர் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து, அவரது மகள் மெகபூபா முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். ஆனால், இந்த ஆட்சி நீடிக்கவில்லை. 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பா.ஜனதா தன் ஆதரவை திரும்பப்பெற்றதால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அங்கு முதலில் கவர்னரின் கட்டுப்பாட்டில் ஆட்சியும், தொடர்ந்து சட்டசபை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.
அன்று முதல் இப்போது வரை காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கவில்லை. இதற்கிடையில், 2019-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அதுபோல, மாநில அந்தஸ்தில் இருந்த ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதில், லடாக்குக்கு தேர்தல் கிடையாது. தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சியே நீடிக்கிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ந்தேதிக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதன் அடிப்படையில், ஜம்முவில் 43 தொகுதிகளுக்கும், காஷ்மீரில் 47 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 7 தொகுதிகள் ஆதிதிராவிடர்களுக்கும், 9 தொகுதிகள் மலைவாழ்மக்களுக்கும் ஒதுக்கப்பட்டன. மொத்தம் 873 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 43 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் என்பது ஒரு குறையாகும். முதல் கட்ட தேர்தலில் 61.38 சதவீதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் 57.31 சதவீதமும், மூன்றாம் கட்ட தேர்தலில் 69.69 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. ஆக, மொத்தம் 62.79 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதில், மிகச் சிறப்பு என்னவென்றால், எங்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை. இதற்கு மிக முக்கிய காரணம், அங்குள்ள பிரிவினைவாத சக்திகளே இந்த முறை ஜனநாயக பாதைக்கு திரும்பிவிட்டதுதான்.
ஜமாத்-இ-இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த 33 பேர் காஷ்மீரிலும், ஒருவர் ஜம்முவிலும் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்த தேர்தலின் மிகப்பெரிய ஜனநாயக வெற்றியே, எந்த வாக்குச்சாவடியிலும் மறு ஓட்டுப்பதிவு நடக்கவில்லை என்பதுதான். மேற்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமையும் வழங்கப்பட்டு, அவர்களுக்கு இந்த முறை ஓட்டுபோடும் உரிமையும் வழங்கப்பட்டது. இதுபோல, வால்மிகி சமாஜ் மற்றும் கோர்க்கா சமுதாயத்தினருக்கு இதுவரை 75 ஆண்டுகளாக ஓட்டுரிமை இல்லாத நிலையில், இப்போது 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் காஷ்மீர் பற்றிய கண்ணோட்டமே இந்த தேர்தலில் மாறிவிட்டது. 8-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் அங்கு அமையப்போகும் புதிய அரசியல் பாதை என்னவென்பது தெரியும்.