ரெயில் பயணிகளுக்கு முதலுதவி!
|ரெயில்களில் பயணம் செய்யும் அனைத்து டிக்கெட் பரிசோதகர்கள் வசமும் அடிப்படை மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டியை வழங்கும் திட்டம் நிறைவேற இருக்கிறது.
சென்னை,
மருத்துவ உதவி என்பது எந்த நேரத்திலும் யாருக்கும் தேவைப்படலாம். அதிலும் குறிப்பாக பயண நேரங்களில் ஏதாவது மருத்துவ உதவி அவசரமாக தேவைப்பட்டால், அந்த நேரத்தில் உடனடியாக டாக்டர்களின் உதவியோ, மருந்து கிடைக்காத நிலையோ ஏற்பட்டு தவிக்கும் சூழ்நிலை உருவாகும். பல நேரங்களில் விமான பயணத்தின்போது ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால், விமானியோ, விமான பணிப்பெண்களோ, "டாக்டர்கள் யாராவது பயணம் செய்கிறீர்களா?" என்று கேட்பது வழக்கம். அப்படி யாராவது டாக்டர்கள் இருந்தால், அவரைக்கொண்டு நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பார்கள். மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அருகில் உள்ள விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.
இதுபோல, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்று சிகிச்சையளிக்கும் முறை உள்ளது. இதுபோன்ற தருணங்களில், முதல் 48 மணி நேரத்துக்கு இலவச மருத்துவ சிகிச்சையளிக்க "இன்னுயிர் காப்போம்-நம்மைக்காக்கும் 48" என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, அந்த திட்டமும் இப்போது அமலில் உள்ளது. இதுபோல, ரெயில் நிலையங்களை எடுத்துக்கொண்டால், நிலைய அதிகாரிகள் பொறுப்பில் முதலுதவி பெட்டி இருக்கிறது. ஆனால், ஓடும் ரெயில்களில் யாருக்காவது திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும்போது, டாக்டர்கள் யாராவது இருந்தால், அவர்கள் வந்து சிகிச்சை அளித்தால்தான் உண்டு. மற்றபடி, உயிருக்கு போராடும் நிலை இருந்தால், அடுத்து வரும் பெரிய ஊரில் ரெயிலை நிறுத்தி, நோயாளியை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள். இதனால், ரெயில் புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்படும்.
பல நேரங்களில் பயணிகள், குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல், கடும் சோர்வு, மூக்கடைப்பு, வாந்தி, வயிற்றோட்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. இதுபோன்ற நேரங்களில் சக பயணியாக ஒரு டாக்டர் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு தகுந்த சிகிச்சையளிக்க முடியும். உதவி கிடைக்காத பட்சத்தில், அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இதுபோன்ற நிலையை தவிர்க்க, இப்போது ரெயில்வே நிர்வாகம் ரெயில்களில் பயணம் செய்யும் அனைத்து டிக்கெட் பரிசோதகர்கள் வசமும் அடிப்படை மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டியை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. எடுத்துக்காட்டாக, நெஞ்சுவலி வந்தால் பயன்படுத்தும் 'சார்பிட்ரேட்' மாத்திரை, சாதாரண காய்ச்சலுக்கு தேவையான 'பாரசிட்டமால்' மாத்திரை உள்பட அனைத்து அடிப்படை மாத்திரைகள், மருந்துகள், ஊசி மருந்துகள் உள்பட அனைத்து முதலுதவிக்கும் தேவையான மருந்துகள், உபகரணங்கள் அந்த முதலுதவி பெட்டியில் இருக்கும்.
பரீட்சார்த்தமாக ஒரு ஆண்டுக்கு வடக்கு மற்றும் மத்திய வடக்கு ரெயில்வே மண்டலங்களில் ஓடும் அனைத்து ரெயில்களிலும் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் இந்த முதலுதவி பெட்டிகளை விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தகுந்த நடவடிக்கைதான். இதை அந்த 2 ரெயில்வே மண்டலங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தாமல், முதல் கட்டத்திலேயே தெற்கு ரெயில்வேயில் ஓடும் அனைத்து ரெயில்களிலும் செயல்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ரெயிலிலும் டாக்டர்கள், நர்சுகள் எந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்கிறார்கள், அவர்களின் இருக்கை எண் எது? என்பதை அனைத்து டிக்கெட் பரிசோதகர்களும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும்.