மாநிலப் பட்டியலில் கல்வி!
|தமிழக அரசு உள்பட பல மாநில அரசுகள் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்தன.
சென்னை,
தமிழ்நாட்டில் கல்வியும் மருத்துவமும் என் இரு கண்கள் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், மாநில கல்வி கொள்கையை வகுத்து அறிக்கை தர ஓய்வுபெற்ற டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் கல்வி, விளையாட்டு, இசை போன்ற பல்வேறு துறைகளில் திறமை பெற்ற நிபுணர்களைக்கொண்ட ஒரு குழுவை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நியமித்தார். அந்த குழு கல்வி தொடர்பான அனைத்து அம்சங்களையும் மிக விரிவாக அலசி ஆராய்ந்து அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில் முதல் பரிந்துரையாக தமிழக அரசு கல்வியை அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் 2-வது பிரிவுக்கு, அதாவது இப்போது மத்திய பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது. இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு பரிந்துரையாகும். நமது முன்னோர்கள் அரசியல் சட்டத்தை வகுக்கும்போது என்னென்ன துறைகள் மாநில அரசுகளின் நிர்வாகத்தில் இருக்கலாம்? என்னென்ன துறைகள் மத்திய அரசாங்க நிர்வாகத்தில் இருக்கலாம்? என்பதை தெளிவாக வரையறுத்து கொடுத்திருந்தனர். அந்த வகையில், கல்வி மாநில அரசுகளின் பொறுப்பில் இருக்கவேண்டும் என்றே நிர்ணயித்து இருந்தனர்.
அதுபோல, 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட வரை மாநில அரசின் நிர்வாகத்திலேயே கல்வி முழுக்க.. முழுக்க.. இருந்தது. ஆனால், அப்போது இந்திராகாந்தி அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில், கல்வியை மாநில பட்டியலில் இருந்து மாற்றி பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றுவிட்டார். அதிலிருந்து தமிழக அரசு உள்பட பல மாநில அரசுகள் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்தன. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவந்தால் மட்டுமே, அந்த மாநிலம் சார்ந்த சூழ்நிலைக்கேற்ப கல்விக்கொள்கைகளை, பாடத்திட்டங்களை வகுக்க முடியும்.
சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழாவை நடத்திய தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் கூட, இந்த கருத்தை வலியுறுத்தி பேசினார். இப்போது கற்றறிந்த நீதிபதி முருகேசன் குழுவும் இந்த கருத்தையே வலியுறுத்தி இருப்பதால், தமிழக அரசு உடனடியாக இந்த முயற்சிகளை தொடங்க வேண்டும். மக்களவையில் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்ட 49-வது ஆண்டு தினத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திரமோடியும், "நெருக்கடிநிலை காலம் இந்தியாவின் இருண்ட காலம்" என்று வர்ணித்துள்ளனர்.
இருண்ட காலத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை உடனடியாக மாற்றி கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசாங்கத்தை கோர வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் 'இந்தியா' கூட்டணியின் மற்ற கட்சிகளையும் சேர்த்து போராடும் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் இந்த பிரச்சினையையும் மற்ற கூட்டணி தலைவர்களின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவர்களையும் மட்டுமல்லாமல், பா ஜனதா ஆளும் மாநில அரசுகளையும் இணைத்து கோரிக்கையை வலுவாக்கவேண்டும். எல்லா மாநில அரசுகளுக்கும் இது பிரச்சினை என்பதால், எல்லோரும் இதில் நிச்சயமாக ஓரணியில் நிற்பார்கள். இதுபோல இந்த குழு அளித்துள்ள மற்ற பரிந்துரைகளும், குறிப்பாக அனைத்து உயர் கல்வி வகுப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அளித்துள்ள பரிந்துரைகளையும் அரசு பரிசீலித்து, என்னென்ன பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன? என்பதை அரசு அறிவிக்கவேண்டும்.