செப்டம்பர் 12ம் தேதி அறிமுக விழா..! புதிய ஐபோன்-15 மாடல்களை வெளியிடுகிறது ஆப்பிள்
|புதிய போன்கள் வெளியீட்டு நிகழ்வு ஆப்பிள் இணையதளத்தில் செப்டம்பர் 12ம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
ஆப்பிள் நிறுவனம் முந்தைய மாடல்களை விட அதிநவீன வசதிகளுடன் புதிய ஐபோன் 15 மாடல்களை உருவாக்கியிருக்கிறது. முந்தைய வெர்ஷனை விட இதில் அதிவேக சார்ஜிங் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும், இதன் டாப் எண்ட் மாடல்களில் அதிநவீன பிராசஸர், மேம்பட்ட பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா சார்ந்த புதிய அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கசிந்தன. அதனை உறுதி செய்யும் வகையில், செப்டம்பர் 12-ல் வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பு விடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். செப்டம்பர் 12ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இதற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் உள்ளிட்ட புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய போன்கள் வெளியீட்டு நிகழ்வு ஆப்பிள் இணையதளத்தில் செப்டம்பர் 12ம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
ஆப்பிள் அறிமுகப்படுத்தும் சில புதிய சாதனங்கள் டைட்டானியத்தால் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 12ல் நடக்கும் நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களையும் அறிவிக்கலாம். இதில் உயர்தரமான ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பும் அடங்கும்.