ஐபோன்-15 சீரிஸ் மாடல்கள் இன்று அறிமுகம்..! ஆப்பிள் நிகழ்வுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்
|ஐபோன்களின் முந்தைய வெர்ஷனை விட புதிய மாடலில் அதிவேக சார்ஜிங் வசதி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இன்று ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய போன்கள் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு துவங்குகிறது. இந்நிகழ்வு ஆப்பிள் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இரண்டு ஸ்மார்ட் வாட்ச் மாடல்கள் உள்ளிட்ட இதர சாதனங்கள் மற்றும் ஆப்பிள் சேவைகள் பற்றிய அறிவிப்புகள் இந்த நிகழ்வில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபோன்களின் முந்தைய வெர்ஷனை விட புதிய மாடலில் அதிவேக சார்ஜிங் வசதி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் லைட்னிங் போர்டுக்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி போர்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இதன் டாப் எண்ட் மாடல்களில் அதிநவீன பிராசஸர், மேம்பட்ட பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா சார்ந்த புதிய அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்நிகழ்வை எதிர்நோக்கி உள்ளனர்.
ஐபோன் 14 மாடலை விட ஐபோன் 15 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை சேர்த்திருப்பதால் விலை சற்று அதிகமாக இருக்கும். முந்தைய வெர்ஷனைவிட ஐபோன் 15 ப்ரோ மாடலுக்கு சுமார் 10,000 ரூபாயும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு 20,000 ரூபாயும் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.