< Back
ஞாயிறுமலர்
பிரமிக்க வைக்கும் பாரத் மண்டபம்
ஞாயிறுமலர்

பிரமிக்க வைக்கும் 'பாரத் மண்டபம்'

தினத்தந்தி
|
15 Sep 2023 2:14 PM GMT

உலக தலைவர்கள் ஒன்று கூடி இருக்கும் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் ‘பாரத் மண்டபம்’ பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகளால் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த மாநாட்டுக்காகவே புதுடெல்லியில் உள்ள கன்வென்ஷன் சென்டர் 2700 கோடி ரூபாய் செலவில் பல நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. 'மேக் இன் இந்தியா' முயற்சியை பெருமைப்படுத்தும் வகையில் உலக தரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாரத் மண்டபத்திலுள்ள அமைப்புகளை சற்று விரிவாக காண்போம்.

தளம்-1: பிரதமர் ஓய்வு அறை மற்றும் சந்திப்பு அறை

முதல் தளம் 6 மீட்டர் உயரம் கொண்டது. பிரதமருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 24 சந்திப்பு அறைகள் இந்த வளாகத்திற்குள் உள்ளன. இதில் பிரதமருக்கான ஓய்வு அறையும் அடங்கும். மேலும் 200 பேர், 100 பேர் மற்றும் 50 பேர் அமரும் வசதி கொண்ட மீட்டிங் அறைகள் உள்ளன. எனவே, ஒரு மாநாடு நடைபெறும் போதெல்லாம் குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ அமரும் வகையில் இந்த அறைகள் வடிமைக்கப் பட்டுள்ளன. சிறிய குழுக்களாக அமரும் வகையிலும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

தளம்-2: உச்சிமாநாட்டை நடத்தும் வி.வி.ஐ.பி-க்கான அறை

ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் இடம் இது. உலகத்தலைவர்களுக்கு ஏற்ற வகையில் ஜி-20 உச்சி மாநாட்டை நடத்த இந்தத் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மற்றும் பிற பிரதிநிதிகளை வரவேற்கும் இடமாக உள்ளது. கூடுதலாக, இரண்டு சிறிய ஆடிட்டோரியங்களும் உள்ளன. இதில் ஒன்று 600 ேபர் அமரும் திறன் கொண்டது, மற்றொன்று 900 ேபர் அமரும் திறன் கொண்டது. உச்சி மாநாட்டு அறையானது ஆடம்பரமான பாணியில் பளபளக்கும் விளக்குகளுடன் அரச மாளிகை போன்ற தோற்றத்தை கொடுக்கிறது. கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மயில் இறகு வடிவமைப்புகள் கண்களுக்கு விருந்தளிக்கும்.

தளம்-3: உலகின் மிகப்பெரிய உட்புற மண்டபம்

மூன்றாவது தளத்தில் ஒரு பல்நோக்கு மண்டபம் அமைந்துள்ளது. ஆறு எல்.இ.டி திரைகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய உட்புற மண்டபம் இதுவாகும். இதில் கலாசார நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடைபெறும். எல்லா அளவிலான கூட்டங்களும் இங்கு நடத்தப்படலாம். மேலும் இந்த மண்டபம் ஒரு கால்பந்து மைதானம் போல பெரியது என்றால் கற்பனை செய்து பாருங்கள்.

தளம்-4: கூட்டரங்கு

இதில் இடம்பெற்றிருக்கும் பெரிய கூட்டரங்கு அமைப்பு அனைவரையும் ஈர்க்கக்கூடியது. இது பெரிய அளவிலான மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகளுக்கு பொருத்தமான இடமாக விளங்கும். இந்த வளாகத்தில் சுமார் 14 ஆயிரம் பேர் அமரக்கூடிய இட வசதி உள்ளது. இங்கு அமர்ந்தால் டெல்லியின் மொத்த அழகையும் கண்டுகளிக்கலாம்.

தளம்-5: தொழில்நுட்ப ஊழியர்களுக்கான இடம்

ஐந்தாவது மாடி தொழில்நுட்ப ஊழியர்களுக்கு இடமளிக்கிறது. அதே சமயம் பாரத் மண்டபத்தின் பின்னால் உள்ள கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில் சமையலறை உள்ளது.

இதற்கு பின்புறம் மேலும் ஒரு மண்டபம் இருக்கிறது. அது ஆடிட்டோரியம் போல கட்டமைக்கப்பட்டு ஆயிரம் இருக்கைகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்த இரண்டு அரங்குகளையும் ஒரு பெரிய மண்டபமாக இணைக்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சம். அப்படி இரண்டு அரங்குகளையும் இணைத்தால் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் இருக்கும்.

மேலும் செய்திகள்