வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிகள்
|வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிகள் பேரழிவை ஏற்படுத்திய சில சம்பவங்கள் உங்கள் கவனத்திற்கு...
சுனாமி என்றதும் 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் மையம் கொண்டு 14 நாடுகளை சென்றடைந்து லட்சக்கணக்கான மக்களை கொன்ற ஆழிப்பேரலைதான் நினைவுக்கு வரும். கடலுக்கு அடியில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் அமைதி தவழும் கடல் அலைகளை ஆக்ரோஷமாக எழவைத்து கடல் பகுதிகளை கபளீகரம் செய்துவிடுகின்றன. நீண்டகாலமாகவே சுனாமியின் விஸ்வரூபம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவை வரலாற்று பக்கங்களில் பதிவாகி உள்ளன. அவற்றுள் பேரழிவை ஏற்படுத்திய சில சம்பவங்கள் உங்கள் கவனத்திற்கு...
போர்ச்சுகல், 1755
1755-ம் ஆண்டில் மிகப்பெரிய பூகம்பம் போர்ச்சுகலை தாக்கியது. மேற்கு கடற்கரை பகுதியில் மூன்று பெரிய அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக 100 அடி (30 மீ) உயரம் வரை எழுந்து வந்து நகரங்களுக்குள் புகுந்தது. லிஸ்பன் நகரம் இன்னும் இந்தப் பேரழிவின் வடுக்களை சுமந்து நிற்கிறது. இந்த சுனாமியில் 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
இந்தோனேசியா, 1883
1883-ம் ஆண்டில் இந்தோனேஷியாவில் அபாயகரமான சுனாமி ஒன்று உருவானது. அது எரிமலையின் அதிர்வால் ஏற்பட்டது. அதன் வீரியம் கடல் அலைகளை வெகுண்டெழச் செய்தது.100 அடிக்கும் மேல் (30 மீ) உயரம் கொண்ட பல அலைகள் கடற்கரையை தாக்கி, அஞ்சர் மற்றும் மெராக் நகரங்களை அழித்தன. இந்த அலையில் சிக்கி 40 ஆயிரம் பேர் இறந்தார்கள்.
இத்தாலி, 1963
வடக்கு இத்தாலியில் வஜோன்ட் என்ற அணை கட்டப்பட்டது. அது மிக உயரமான அணையாக இருந்தது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அது ஒட்டுமொத்தமாக அணைக்குள் சரிந்து விழுந்தது. அதனால் அழுத்தம் தாங்காமல் 1963-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி அணை இடிந்தது. அதில் இருந்து வெளியேறிய நீர் 15 நிமிடங்களில் பியாவ் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த கிராமங்களை சூழ்ந்துவிட்டது.
சுனாமி அலை போல் ஆக்ரோஷமாக சீறி வந்த நீரின் வேகத்தில் பலரும் அடித்து செல்லப்பட்டார்கள். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவாக வரலாற்று பக்கங்களில் பதிவாகி விட்டது. ஜப்பான் நாடுதான் சுனாமியால் அதிக சேதத்தை எதிர்கொண்டிருக்கிறது. 1896, 1498, 1498 ஆகிய ஆண்டுகளிலும் கடுமையான சுனாமிகள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்தோனேசியா, 2004
சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் டிசம்பர் 26-ந் தேதி உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் கடலில் 30 கி.மீ ஆழத்தில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது கடல் அலையை சுமார் 160 அடி (50 மீ) உயரத்தில் ஆர்ப்பரிக்கவைத்து சுனாமியாக வெகுண்டெழுந்தது.
சுமத்ராவில் 3 மைல்கள் (5 கி.மீ) பயணித்து அழிவை ஏற்படுத்தியது. அதோடு அதன் ஆக்ரோஷம் அடங்கவில்லை. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் 14 நாடுகளை அடைந்து பேரழிவை ஏற்படுத்தியது. சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். பல நகரங்கள் அழிந்தன. 1.7 மில்லியன் மக்களை இடம் பெயர்ந்தார்கள். இந்த சுனாமி 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சேதத்தை ஏற்படுத்தியது.
ஜப்பான், 2011
ஜப்பான் வரலாற்றில் மிகக்கடுமையான பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் பதிவாகி உள்ளன. 2011-ம் ஆண்டு அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த சுனாமி அதிபயங்கரமானது. 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 30 அடி உயரத்தில் கடல் அலைகளை எழச்செய்து மணிக்கு 800 கி.மீ வேகத்தில் பயணிக்கவைத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது. அணு மின் நிலையமும் பாதிப்புக்கு உண்டானது. அதில் இருந்து வெளியேறிய கழிவுகளால் கடலும் மாசுபட்டது. ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.
கிரீன்லாந்து, 2017
கிரீன்லாந்தின் மேற்கு கடற்கரையில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வு காரணமாக நுகாட்சியாக் என்ற மீன் பிடி கிராமம் அழிந்தது. அங்கு பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அத்துடன் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஜோர்ட் என்ற இடத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
11 வீடுகள் உட்பட 45 கட்டிடங்கள் சேதமடைந்தன. புவி வெப்பமடைதலின் விளைவாக பனிப்பாறைகள் உருகுவதால் இந்த சுனாமி ஏற்பட்டது பின்னர் தெரியவந்தது.