< Back
ஞாயிறுமலர்
சுற்றுலா ஏன் செல்ல வேண்டும்?
ஞாயிறுமலர்

சுற்றுலா ஏன் செல்ல வேண்டும்?

தினத்தந்தி
|
4 April 2023 9:46 PM IST

புதிய இடங்களை பார்வையிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி புதிய புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதும், அங்கு புதிய நபர்களை சந்தித்து பேசுவதும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் ஆர்வம் உலகமெங்கும் அதிகரித்துள்ளது. புதிய இடங்களை பார்வையிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி புதிய புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதும், அங்கு புதிய நபர்களை சந்தித்து பேசுவதும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன நலனை பேணுவதற்கு 'டிராவலிங் தெரபி' எனப்படும் பயண சிகிச்சை உதவும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஒரே மாதிரியான வேலையையே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்து வருவது ஒருவித சலிப்பை ஏற்படுத்தலாம். அது நெருக்கடி மிகுந்த வேலையாக இருக்கும்பட்சத்தில் மன அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடலாம். வேலை, வீடு என்ற சுழற்சி முறை வாழ்க்கை சூழலில் இருந்து குறிப்பிட்ட காலமாவது விலகி இருப்பது புத்துணர்ச்சி பெற உதவும். வழக்கமான வாழ்க்கை அட்டவணைக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தாலே போதுமானது. அதுவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட தேவையான நிவாரணத்தை கொடுக்கும். மீண்டும் உற்சாகமாக இயங்குவதற்கு தூண்டும். அதற்கு பயணம்தான் தீர்வாக அமையும்.

பலரும் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி பயணம் செய்யும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படி பயணம் செய்வது மன ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக உணரவும் செய்திருக்கிறார்கள். கடற்கரைகள், ஏரிகள், ஆறுகள், சிற்றோடைகள் என இயற்கையோடு தொடர்புடைய இடங்களில் நேரத்தை செலவிடுவது மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்சினைகளை போக்க உதவும். ஏனெனில் நீர் நிலைகள் மக்களை ஈர்க்கும் இயற்கை அழகியல் அம்சங்களை கொண்டிருக்கின்றன. அவை மனதிற்கு நிம்மதியையும், அமைதியையும் அளிக்கின்றன. அதனால்தான் அமைதியான சூழல் கொண்ட இயற்கை தேசங்களை பலரும் விரும்புகிறார்கள். குளிர் பிரதேசங்கள், மலை பிரதேசங்களுக்கு பயணம் செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

மனக்குழப்பம், மனக் கவலை, மன அழுத்தம் போன்ற மன ரீதியான பிரச்சினைகளை அனுபவிக்கும் சமயத்தில் புதிய இடத்துக்கு பயணம் செய்வதும், புதிய மனிதர்களை சந்திப்பதும் வாழ்க்கை மீதான வெறுப்பை போக்கி, வித்தியாசமான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். ஒரே சமயத்தில் எண்ணிலடங்கா எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கும்போது மனக்குழப்பம் உண்டாகும். வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால் மனம் தெளிவடையாது. அந்த சமயத்தில் பயணம் மேற்கொள்வது மன மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். புதிய இடத்திற்குத்தான் பயணம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. சிலருக்கு பிடித்தமான இடங்களுக்கு மீண்டும் செல்வது மனதை ஆசுவாசப்படுத்த உதவும்.

நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன்தான் பலரும் பயணம் மேற்கொள்வார்கள். சிலருக்கு தனிமை பயணம்தான் பிடிக்கும். அது அவரவர் விருப்பத்தை சார்ந்தது.

எனினும் மன ரீதியான குழப்பத்தில் இருக்கும் சமயங்களில் தனிமை பயணத்தை தேர்ந்தெடுக்கலாம். அல்லது மனதுக்கு பிடித்தமானவர்களுடன் பயணிக்கலாம். பெரும்பாலும் தனிமை பயணம்தான் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

மேலும் செய்திகள்