முதுமையை தாமதப்படுத்த வேண்டுமா?
|உணவு, தூக்கம், மன அழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
முதுமை பருவத்தை எட்டினாலும் கூட இளமை தோற்றத்துடன்தான் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. அதற்காக அழகு சாதன பொருட்களை சார்ந்திருப்பது மட்டும் பயனில்லை. உணவுப்பழக்கமும், வாழ்க்கை முறையுமே இளமை தோற்றத்தை தக்க வைக்க துணைபுரியும்.
சருமத்தின் வயதையும், தோற்ற பொலிவையும் மரபணுவும், சுற்றுச்சூழல் காரணிகளும் பாதிக்கலாம். உணவு, தூக்கம், மன அழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
முதுமையை வேகப்படுத்துபவை
சர்க்கரை:
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது கிளைகேஷன் எனப்படும் செயல்முறைக்கு வழிவகுக்கும். அதில் உள்ளடங்கி இருக்கும் சர்க்கரை மூலக்கூறுகளும், சருமத்தில் உள்ள கொலாஜன்களும் பிணைக்கப்படும். அவை சருமத்தை கடினமாக்கும். அதனால் தோல் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும்.
பதப்படுத்தப்பட்ட- பொரித்த உணவுகள்:
இந்த உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும், அதிக அளவு சோடியமும் கலந்திருக்கும். அவை உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். அதே பழக்கத்தை தொடரும்போது நாள்பட்ட அழற்சிக்கு வித்திடும். கொலாஜன் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி தோல் வயதாவதை துரிதப்படுத்தும்.
மதுப்பழக்கம்:
மது அருந்துவது சருமத்தை நீரிழப்பு செய்து சரும வறட்சிக்கும், சுருக்கங்களை ஏற்படுத்தும் கோடுகளுக்கும் வழி வகுத்துவிடும். காபி அதிகம் பருகுவதும் நீரிழப்புக்கு வித்திடும். மந்தமான, வறண்ட மற்றும் வயதான தோற்றமுடைய சருமத்தை ஏற்படுத்தும். இந்த பழக்கங்களை தவிர்த்தாலே முதுமையை தாமதப்படுத்திவிடலாம்.
முதுமைக்கான காரணங்கள்:*
செலரி, சிட்ரஸ் பழங்கள் போன்ற சில உணவு பொருட்கள் சருமத்தை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும் சோராலென்ஸ் எனப்படும் சேர்மங்களை கொண்டிருக்கின்றன. அவற்றை சாப்பிட்டு கடுமையான சூரிய ஒளி படும் பகுதியில் நேரத்தை செலவழித்தால் விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்க்க தொடங்கும்.
* சர்க்கரை அதிகம் கலந்த உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். நாளடைவில் தோலின் வயதை விரைவுபடுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
* சில உணவுகள், அதிக வெப்பத்தில் சமைக்கப்படும்போது ப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இவை சரும செல்களுக்கு தீங்கு விளைவித்து, வேகமாக சருமம் முதிர்ச்சி நிலையை அடைய வைக்கின்றன.