< Back
ஞாயிறுமலர்
வேகமாகவும், நீண்ட தூரமும் ஓட வேண்டுமா?
ஞாயிறுமலர்

வேகமாகவும், நீண்ட தூரமும் ஓட வேண்டுமா?

தினத்தந்தி
|
1 Oct 2023 1:16 PM IST

பஸ், ரெயிலை பிடிப்பதற்கு வேகமாக நடந்தாலே சிலருக்கு மூச்சு வாங்கத்தொடங்கிவிடும். ஓடிப்போய் பஸ், ரெயில் ஏறும் சூழல் இருந்தால் மூச்சுத்திணறலுக்கு ஆளாக நேரிடும். தினமும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தசைகள், தசை நார்கள், எலும்புகளை வலுப்படுத்த முடியும்.

வேகமாக நடக்க, ஓட உடலை தயார்படுத்திக்கொள்ளவும் முடியும். ஓட்டப்பந்தய பயிற்சி பெறுபவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் ஓடும் திறனை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். ஆரம்பத்தில் மெதுவாக ஓடத்தொடங்கி வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். அப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...

* தினமும் தவறாமல் ஓட்டப்பயிற்சி பெற வேண்டும். ஒரு நாள் மெதுவாகவும், மறுநாள் வேகமாகவும் ஓடக்கூடாது. சீரான வேகத்தை பின்பற்ற வேண்டும். அந்த வாரம் முழுவதும் அதே வேகத்தில் ஓடியே பயிற்சி பெற வேண்டும். மறுவாரம் வேகத்தை சற்று அதிகரிக்கலாம். ஆனால் அதிகரித்த வேகத்திலேயே அந்த வாரம் முழுவதும் பயிற்சி பெற வேண்டும். வாரந்தோறும் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை ஓடும் வேகத்தை அதிகப்படுத்தலாம்.

* ஓடும் வேகத்திற்கு ஏற்ப உடலுக்கு போதுமான சக்தி கிடைக்க வேண்டும். அதற்கு உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், ஓட்ஸ், எனர்ஜியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை பானங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

* ஓட்டப்பயிற்சி பெறுபவர்களின் உடல் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதனால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் போதுமான அளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். இளநீர், மூலிகை தேநீர் போன்ற பானங்களையும் பருகலாம்.

* ஓட்டப்பயிற்சியை தொடங்கு வதற்கு முன்பு 'வார்ம்-அப்' பயிற்சிகளை செய்வதற்கு மறக்கக்கூடாது. அதுபோல் ஓடி முடித்ததும் 'கூல் டவுன்' பயிற்சிகளை செய்யவும் மறக்கக்கூடாது. இந்த பயிற்சிகள் தசைகளில் ஏற்படும் வீக்கம், வலியை குறைக்க உதவும்.

* ஓரளவுக்கு வேகமாக ஓடுவதற்கு பயிற்சி பெற்றாலும் கூட நிலையான ஓட்டத்திறனை பின்பற்ற வேண்டும். திடீரென வேகமாகவோ, சட்டென்று வேகத்தை குறைத்தோ ஓடக்கூடாது. சீராக ஓடி பயிற்சி பெறுவதுதான் நீண்ட தூரம் சோர்வில்லாமல் ஓடுவதற்கான உடல் வலிமையை கொடுக்கும். நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்கும் போது கூட ஆரம்பத்தில் வேகமாக ஓடக்கூடாது. சீராக வேகத்தை பின்பற்றினால்தான் நீண்ட தூர இலக்கை நோக்கி சோர்வில்லாமல் பயணத்தை தொடர முடியும்.

* ஓட்டப்பயிற்சி பெறுவதற்கு தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். மறுநாள் அதே நேரத்தை பின் தொடர வேண்டும். அப்படி செய்வது உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்க வழிவகுக்கும். தூக்கமும் அவசியமானது.

மேலும் செய்திகள்