டிரெட்மில்,திறந்தவெளி நடைப்பயிற்சி: எது சிறந்தது?
|திறந்தவெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது வெளிப்புறத்தில் சுழலும் புதிய காற்றை சுவாசிக்கும் சூழல் உருவாகும்.
நடைப்பயிற்சி போன்ற எளிமையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது நல்வாழ்வுக்கு வித்திடும். உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். பூங்காக்கள், திறந்தவெளி பகுதிகளில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். உடற்பயிற்சி கூடத்திலோ அல்லது வீட்டிலோ அமைக்கப்பட்டிருக்கும் டிரெட்மில்லில் நடந்து பயிற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றுள் எந்த உடற்பயிற்சி சிறந்தது? என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு.
திறந்தவெளி நடைப்பயிற்சி, டிரெட்மில் நடைப்பயிற்சி இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது உடற்பயிற்சி நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் இந்த இரண்டு பயிற்சிகளுக்கும் உண்டு. அத்துடன் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கக்கூடியது.
திறந்தவெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது வெளிப்புறத்தில் சுழலும் புதிய காற்றை சுவாசிக்கும் சூழல் உருவாகும். அது நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்தும். ஆழ்ந்த சுவாசத்திற்கு வழிவகுப்பதோடு ஆக்சிஜன் நுகர்வை ஊக்குவிக்கும். இருப்பினும் டிரெட்மில்லில் நடைப்பயிற்சி செய்வது பல்வேறு நன்மைகளுக்கு வித்திடும். வெளிப்புற காற்றில் மாசுகள் கலந்திருக்க வாய்ப்புள்ளது. அதனை ஒப்பிடும்போது டிரெட்மில் இருக்கும் அறைக்குள் காற்றின் தரம் ஓரளவு நன்றாகவே இருக்கும். காற்று உட்புகுந்து வெளியேறி செல்லும் வகையில் காற்றோட்ட சுழற்சி கொண்ட கட்டமைப்புகளுடன் அறைகள் அமைக்கப்பட்டிருப்பதால் நல்ல காற்றை சுவாசிக்கும் சூழல் உருவாகும். அது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு வித்திடும்.
நடைப்பயிற்சி உடலில் ஹார்மோன் சமநிலையை சீராக்கவும் உதவும். நல்ல ஹார்மோன்கள் என்று அழைக்கப்படும் எண்டோர்பின்கள் வெளியீட்டை தூண்டுவதற்கும் துணைபுரியும். மேலும் மன நிலையை மேம்படுத்தவும், பதற்றத்தை தடுக்கவும், மனச்சோர்வுக்கான அறிகுறிகளை போக்கவும் உதவும். திறந்தவெளி நடைப்பயிற்சி அல்லது டிரெட்மில் இதில் எதை தேர்ந்தெடுத்தாலும் ஹார்மோன்களுக்கு நலம் பயக்கும். ஆரோக்கிய வாழ்வுக்கும் வழிவகுக்கும்.
பூங்கா, தெரு போன்ற திறந்தவெளி பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது சமதளமற்ற நிலப்பரப்பு, காற்றின் வேகம், சுற்றுப்புற சூழல் ஆகியவற்றுக்கு ஈடு கொடுத்து பயிற்சி மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதற்கேற்ப உடல் இயக்க செயல்பாடும் அதிகரிக்கும். அதனால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். டிரெட்மில்லில் மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சி சீரான வேகத்தை கொண்டிருக்கும். அதுவும் கலோரிகளை எரிக்க உதவும் என்றாலும் வெளிப்புற நடைப்பயிற்சியில்தான் அதிக கலோரிகளை எரிக்க முடியும். திறந்தவெளி நடைப்பயிற்சி புதிய காற்று, இயற்கை சூழல் மற்றும் புத்துணர்வை வழங்கும். டிரெட்மில் நடைப்பயிற்சியை விரும்பிய நேரங்களில் மேற்கொள்ள முடியும். அவரவர் உடல்நிலை, சவுகரியம் உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு நடைப்பயிற்சியை தேர்வு செய்து கொள்வது நல்லது.