< Back
ஞாயிறுமலர்
எகிப்துக்கு எளிதாக செல்லலாம்
ஞாயிறுமலர்

எகிப்துக்கு எளிதாக செல்லலாம்

தினத்தந்தி
|
21 April 2023 7:30 PM IST

எந்தவொரு நாட்டுக்குள் நுழைய வேண்டுமானாலும் விசா வைத்திருக்க வேண்டும். சில நாடுகளுக்கு செல்ல விசா வாங்குவதற்கு நீண்ட நடைமுறையை பின்பற்ற வேண்டியிருக்கும். அதனால் விசா கிடைப்பதற்கு காலதாமதாகும்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக உலக சுற்றுலா முடங்கி போய்விட்டது. அதில் இருந்து சுற்றுலா துறையை மீட்டெடுக்க ஒவ்வொரு நாடும் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகின்றன. அவற்றுள் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது, 'விசா ஆன் அரைவல்'. அதாவது அந்த நாட்டிற்கு சென்ற பிறகு அங்கேயே சில மணி நேரத்திற்குள் விசா எடுத்துக்கொள்ள முடியும். அதற்கான ஏற்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கமே எளிதாக செய்து கொடுக்கும்.

உலகம் முழுவதும் இந்த விசாவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் எகிப்து நாடு தனது விசா கொள்கையை மாற்றியுள்ளது. இனி இந்தியர்களுக்கு விசா-ஆன்-அரைவல் வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. அந்த நாட்டுக்குள் செல்ல ஐந்து ஆண்டு விசா எடுத்துக்கொண்டு அந்த காலகட்டத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் சென்றுவிட்டு திரும்புவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.57 ஆயிரத்து 688 விசா கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஒரு முறை மட்டுமே சென்று திரும்புவதற்கான விசா ஆன் அரைவல் திட்டத்திற்கு ரூபாய் 2 ஆயிரத்து 60 செலவாகும். இந்த விசாவை அந்த நாட்டுக்குள் எடுத்த நாளில் இருந்து 30 நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும். இந்த புதிய விசா கொள்கை இந்தியா உள்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எகிப்தின் கிசா பகுதியில் அமைந்திருக்கும் பிரமிடுகள் உலகப் புகழ் பெற்றவை. உலக அதிசயங்களில் இடம் பிடித்தவை. இப்போது கிசாவில் மேலும் புதிய அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளை அழைக்கும் நோக்கத்திலும், கொரோனாவால் சரிவடைந்த சுற்றுலா துறையை மீட்டெடுக்கும் வகையிலும் விசா கொள்கையில் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எகிப்தில் கிசா பிரமிடுகள் மட்டுமின்றி பண்டைய நகரமான லூஸார், ஸ்பிங்க்ஸ், கிங்ஸ் பள்ளத்தாக்கு, கர்னாக் கோவில், நைல் நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அஸ்வான் நகரம், மற்றொரு பண்டைய நகரமான அலெக்ஸாண்டிரியா, புகழ்பெற்ற நூலகம் போன்ற ஏராளமான இடங்கள் உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஷர்ம் எல்-ஷேக் என்ற ரிசார்ட் சூழ்ந்த கடற்கரை நகரம் அமைந்துள்ளது.

செங்கடலில் உள்ள இந்த ரிசார்ட் நகரத்தில் ஸ்நோர்கெல்லிங், ஸ்கூபா டைவிங் போன்ற நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்