வரிசையில் நின்றே பணம் சம்பாதிப்பவர்
|ஒருவருக்காக வரிசையில் நிற்பதற்கு இவர் இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரம் வரை கட்டணம் விதிக்கிறார் பெக்கிட்.
நீண்ட வரிசையில் காத்திருப்பது சிரமமான ஒன்று. சிலர் அதை கவுரவக் குறைச்சலாகக் கருதுவதும் உண்டு. இது போன்றவர்களைக் குறி வைத்து, அவர்களுக்காக வரிசையில் நிற்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார், பெக்கிட். வரலாற்றுப் புனை கதை எழுத்தாளரான பெக்கிட், இந்த வேலையை கடந்த 3 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
ஒருவருக்காக வரிசையில் நிற்பதற்கு இவர் இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரம் வரை கட்டணம் விதிக்கிறார். ஒரு நாளைக்கு குறைந்தது இந்திய மதிப்பில் ரூ.16 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்.
பெக்கிட்டின் சொந்த ஊரான மேற்கு லண்டனின் புல்ஹாம் நகரில் மற்றவர்களுக்காக வரிசையில் நிற்பது பிரபலமான ஒன்றாகும். பென்சன் பெறும் முதியவர்கள் முதல் தொழிலில் பிசியாக இருக்கும் இளம் குடும்பத்தினர் வரை இவரது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.
''சில சமயங்களில் கடும் குளிரிலும் நிற்க வேண்டியிருக்கும்'' என்று கூறும் பெக்கிட், கோடைக்காலங்களில் பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறும்போது தான் பிசியாகிவிடுவதாகக் கூறுகிறார்.
இது குறித்து பெக்கிட், "என் எழுத்துப் பணி பாதிக்காத வகையில் நிறைய சம்பாதிக்க வரிசையில் நிற்கும் வேலை பயன்படுகிறது. நான் வரிசையில் நிற்கும் தொழிலைச் செய்வதை, எனது நண்பர்களும் வேடிக்கையாகப் பார்த்தார்கள். அதையெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை. பொதுவாக ஒரு வரிசையில் 3 மணி நேரம் நிற்க வேண்டி வரும். சிலர் தங்கள் டிக்கெட்டுகளை என்னை வாங்கி வரச் சொல்வார்கள். என்னிடமிருந்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும் வரை அவர்களுக்காக காத்திருப்பேன்" என்கிறார்.