< Back
ஞாயிறுமலர்
மலையேற்ற பிரியர்களை மிரளவைக்கும் பாதைகள்
ஞாயிறுமலர்

மலையேற்ற பிரியர்களை மிரளவைக்கும் பாதைகள்

தினத்தந்தி
|
16 July 2023 8:02 AM GMT

மலையேற்ற சாசக பயணங்கள் இயற்கை அழகியலை ரசிக்க வைக்கும். திகில் நிறைந்த அனுபவத்தையும் கொடுக்கும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான நிலைமையையும் ஏற்படுத்தும். அத்தகைய அபாயகரமான மலைப்பாதைகள் உலகின் பல இடங்களில் உள்ளன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

அன்னபூர்ணா சர்க்யூட்

நேபாளத்தில் உள்ள இந்த மலை பாதையானது ரம்மியமான சூழலை கொண்டது. இரண்டு பள்ளத்தாக்குகள் மற்றும் ஒரு கணவாயை கடந்து உச்சி பகுதிக்கு செல்ல வேண்டும். பனிச்சரிவுகளையும் ஆங்காங்கே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் இதுவும் மலையேறுபவர்களுக்கு ஆபத்தான இடமாக கருதப்படுகிறது.

பிட்ஸ் ராய்

அர்ஜென்டினா மற்றும் சிலி எல்லையில் உள்ள படகோனியாவில் அமைந்துள்ள மலை இது. இங்கு செல்வதற்கு கரடுமுரடான மலைப்பாதையை கடக்க வேண்டி இருக்கும். கணிக்க முடியாத அளவுக்கு வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அதனால் இது அபாயகரமான இடமாக அறியப்படுகிறது. மேலும் மலையில் ஏறுவதும் சவாலானது. ஆபத்தானது. இங்கு யாரேனும் விபத்தில் சிக்கினால் அவர்களை கண்டுபிடித்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதும் சிரமமானது.

கே2/மவுண்ட் காட்வின் ஆஸ்டன்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இது எவரெஸ்ட் சிகரத்திற்கு பிறகு உலகின் இரண்டாவது மிக உயரமான சிகரமாகும். 'சாவேஜ் மவுண்டன்' என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 28,238 அடி (8,607 மீட்டர்). வடக்கு ஜம்மு காஷ்மீரின் காரகோரம் மலைத்தொடரில் பிரமிக்கவைக்கும் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இங்கு சாகச பயணம் மேற்கொள்வது திகிலானது.

இந்த மலைப்பாதையில் அதிக இறப்பு விகிதம் பதிவாகி உள்ளது. அதனால் இந்த மலைச்சிரகத்தை எட்டுவது சவாலான விஷயமாக கருதப்படுகிறது.

எல் காமினிடோ டெல் ரே

ஸ்பெயினில் உள்ள இந்த மலைப்பாதையும் குறுகலான பாதையை கொண்டது. ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் மலையின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பலகையின் வழியே நடக்கும்போது எதிர்புறம் கைப்பிடி இருப்பதுதான். அதனால் பயமின்றி கைகளை பற்றிப்பிடித்தபடியே நடக்கலாம். ஆனாலும் இதுவும் மிகவும் ஆபத்தான நடைபாதையாகவே கருதப்படுகிறது. இரு மலைகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை கடப்பது சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை கொடுக்கும்.

ஹுவா மலை

சீனாவில் அமைந்துள்ள இந்த மலை சிகரமும் திகிலூட்டும் பயண அனுபவத்தை கொடுக்கும். மலையில் செங்குத்தாக வடிவமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டி இருக்கும். மேலும் குறுகிய பலகையில் மலை பாறையை பிடித்தபடியே செல்ல வேண்டும் என்பதால் ஆபத்தான மலையேற்ற பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

மவுண்ட் வாஷிங்டன்

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள இது மற்ற மலைச்சிரகங்களை ஒப்பிடும்போது சற்று குறைவான உயரம் (6,288.2 அடி) கொண்டது. எனினும் வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மிக உயரமான சிகரமாக கருதப்படுகிறது. செங்குத்தான, சரிவு பாதைகளை கொண்டிருக்கும். அத்துடன் பனிக்கட்டிகள் சூழ்ந்திருக்கும் பாதை வழியாக பயணிக்க வேண்டியிருக்கும். சீரற்ற வானிலையும் அங்கு நிலவும். அதனால் ஆபத்தான மலை பாதையாக கருதப்படுகிறது.

ஹூவாஷன்

சீனாவின் ஹுவாஷன் மலையில் இது அமைந்துள்ளது. இது உலகின் மிக ஆபத்தான மலையேற்ற பயணமாக கருதப்படுகிறது. 'பிளாங்க் வாக்' என அறியப்படும் இது செங்குத்தான படிக்கட்டுக்களை கொண்டது. பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை பிடித்தபடி குறுகலான பலகையில் நடக்க வேண்டியிருக்கும். மலையின் விளிம்பில் எதிர்புறம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாதபடி பயணிக்க வேண்டியிருக்கும். மலையில் இருந்து கீழ்நோக்கி பார்த்தால் தலைசுற்றல் பிரச்சினை ஏற்பட்டுவிடும்

மேலும் செய்திகள்