< Back
ஞாயிறுமலர்
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உலர் பழங்கள்
ஞாயிறுமலர்

கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உலர் பழங்கள்

தினத்தந்தி
|
30 April 2023 10:00 PM IST

உலர் பழங்கள் உலர்வாக காட்சி அளித்தாலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு ஏராளமான நன்மைகளையும் வழங்குகின்றன.

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. கோடை வெப்பத்தில் இருந்து உடலை காப்பதற்கு குளிர்ச்சி தரும் பானங்களை பலரும் பருகுகிறார்கள். பிரிட்ஜில் குளிரவைத்து உட்கொள்ளவும் செய்கிறார்கள். ஒரு சில உலர் பழங்கள் கூட உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை படைத்தவை. அவை உலர்வாக காட்சி அளித்தாலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு ஏராளமான நன்மைகளையும் வழங்குகின்றன.

உலர் பழங்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களையும், ஆன்டி ஆக்சிடென்டு களையும், குறைந்த கிளைசெமிக் குறியீடுகளையும் கொண்டவை. உலர் பழங்களை தவறாமல் உட்கொள்வது உடலில் நீர் எடையை பராமரிக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும். பொதுவாக உலர் பழங்களை உட்கொள்வது உடலில் அதிகப்படியான வெப்பம் நிலவுவதற்கு வழிவகுக்கும் என்று நம்பப்பட்டாலும், ஒருசில வழிமுறைகளை பின்பற்றி உட்கொள்வதன் மூலம் நன்மைகளை பெறலாம்.

வால்நெட்: இது இரும்பு, கால்சியம், தாமிரம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும். அக்ரூட் பருப்புகள் வெப்பமயமாதல் விளைவை கொண்டிருப்பதாக அறியப்பட்டாலும், அவற்றை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் உட்கொள்ளலாம். அவ்வாறு சாப்பிடுவது இந்த வெப்பமான கோடை மாதங்களில் உடலை குளிர்விக்க உதவும். ஊறவைத்த அக்ரூட் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் பல ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்க முடியும்.

அத்திப்பழம்: அத்திப்பழங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியவை என்று அறியப்படுகிறது. அதனால் குளிர்கால மாதங்களில் சிறந்த உணவு பொருளாக விளங்குகிறது. இருப்பினும், கோடையில் அத்திப்பழங்களை மிதமாக உட்கொள்வது நன்மை பயக்கும். உடல் அதிக வெப்பமடைவதைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு அத்திப்பழங்களுக்கு மேல் உட்கொள்ளக் கூடாது என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாதாம்: கோடை காலத்தில் உடல் சூட்டை தடுக்க, பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. ஊற வைக்காத பாதாமை உட்கொண்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதனை தவிர்க்க தினமும் 5 ஊறவைத்த பாதாம் பருப்புகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் ஊறவைத்த பாதாம் பருப்புகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை.

உலர் திராட்சை: இது சூப்பர் உணவாக கருதப்படுகிறது. இதனை ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சக்தி கொண்டதாக அறியப்படுகிறது. கோடை மாதங்களில் உலர் திராட்சையை இரவில் ஊற வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு உட்கொள்வது உடலில் குளிர்ச்சி விளைவை உருவாக்க உதவும். வெப்பத்தை விரட்டி உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும். ஊறவைத்த திராட்சையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை அறுவடை செய்யலாம்.

மேலும் செய்திகள்