வெறுங்காலுடன் புல்வெளியில் நடந்தால்....
|நடைப்பயிற்சி மேற்கொள்வது பல்வேறு உடல்நல நன்மைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல் வெறுங்காலுடன் புல்வெளி பகுதியில் நடந்தபடி பயிற்சி செய்வதும் சிறந்த பலனை கொடுக்கும்.
அப்படி வெறுங்காலுடன் நடக்கும்போது கால் பாதங்களுக்கும் பூமிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டாகும். பூமியில் இருக்கும் எதிர்மறை அயனிகள் உடலில் இருக்கும் நேர்மறை அயனிகளை சமநிலைப்படுத்த உதவும். மேலும் பல்வேறு வகைகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துணைபுரியும். அவை என்னவென்று பார்ப்போம்.
மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்:
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் அனைத்து தரப்பினரையும் ஆட்கொண்டிருக்கிறது. மன அழுத்த அளவை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. அதற்கு வெறுங்காலில் புல்வெளியில் நடப்பது பலனளிக்கும். உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் செய்யும்.
தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும்:
பூமியின் மேற்பரப்புடன் பாதம் வழியாக உடல் நேரடியாக தொடர்பு கொள்ளும்போது மன அழுத்த ஹார்மோன்களின் செயல்திறன் குறையும். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்யும். தினமும் குறிப்பிட்ட நேரம் புல்வெளியில் நடப்பது ரத்த நாளத்தின் செயல்பாடுகளை சீராக்கவும் உதவும்.
கண் பார்வையை மேம்படுத்தும்:
கணினி, லேப்டாப், டேப்லெட், செல்போன் என டிஜிட்டல் திரைகளில் நேரத்தை செலவிடுவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இது பல்வேறு விதமான கண் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கவும் செய்கிறது. கண்ணின் நரம்பு மண்டலம் பாதத்தின் கீழ் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நடக்கும்போது இரு கால் விரல்கள் அதிக அழுத்தத்தை பெறுகின்றன என்பது அறிவியல் ரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய அழுத்தம் கண்களின் ஆரோக்கியத்தையும், கண் பார்வையையும் மேம்படுத்த உதவும். அத்துடன் புல்வெளியில் நடக்கும்போது பச்சை நிற புற்களை பார்ப்பது கண்களுக்கு இதமளிக்கும். கண்களுக்கும் நலம் சேர்க்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
புல்வெளியில் வெறுங்காலுடன் நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும். தினமும் புல்வெளியில் நடக்கும் வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் இதயம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்:
காயங்களால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கான எளிய வழி பூமியுடன் தொடர்பு கொள்வதுதான். புல்வெளியில் நடைப்பயிற்சி செய்வது பலன் தரும். ரத்தத்தை உடல் முழுவதும் திறம்பட கொண்டு செல்வதற்கு உதவும். ஒட்டுமொத்த வலியையும் குறைக்கும்.
நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தும்:
புல் மீது வெறுங்காலுடன் நடக்கும்போது காலில் உள்ள சில அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படும். இவை நரம்புகளை தூண்டி நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது வெறுங்காலுடன் புல் மீது நடப்பதற்கு பயிற்சி செய்யுங்கள்.
கால்களின் வலிமையை கூட்டும்:
புல்வெளியில் வெறுங்காலுடன் நடப்பது பாதங்களின் உள்ளங்கால்களில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும். சருமத்தின் மேற்பரப்பில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, பாதங்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும்.
கணுக்கால் மற்றும் கால்களில் உள்ள தசைநார்களை வலுப்படுத்தும். முழங்கால் வலி மற்றும் முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.