106 வயதிலும் தொடரும் தங்க வேட்டை
|முதுமை பருவத்தை எட்டிய பிறகு உடல் வலிமை குறைந்துவிடும் என்ற கூற்றை பொய்யாக்கிக்கொண்டிருக்கிறார், ராம்பாய்.
106 வயதாகும் இந்த மூதாட்டி தொடர்ந்து ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று உடலளவிலும், மனதளவிலும் தன்னை இளமையானவராக புதுப்பித்துக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் டெஹ்ராடூனில் நடந்த 28-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 3 தங்கப்பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்று இலக்கை குறுகிய நேரத்தில் எட்டிப்பிடித்திருப்பதும் பலரையும் வியக்க வைத்துள்ளது.
ராம்பாய், அரியானா மாநிலத்திலுள்ள சார்க்கி தாஹ்ரி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். சிறுவயதில் விளையாட்டு மீது கொண்ட பிரியத்தை முதுமை பருவத்தை எட்டியபிறகும் தொய்வில்லாமல் பின்பற்றி வருகிறார். 2016-ம் ஆண்டு முதல் அவரது விளையாட்டு ஆர்வம் அதிகரிக்கவே, போட்டிகளில் பங்கேற்க தொடங்கிவிட்டார். அமெரிக்கன் மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று உலகின் கவனத்தையும் ஈர்த்தார். 85-வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனையும் படைத்தார்.
இந்த வயதிலும் போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்வதற்காக தொழில்முறை உடற்பயிற்சிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். உணவுக்கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகிறார். பண்ணைகளில் விளையும் காய்கறிகளை நேரடியாக வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்.
வதோதராவில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 45.50 வினாடிகளுக்குள் கடந்து தனது சொந்த சாதனையையும் முறியடித்தார். தற்போது 3 தங்கப்பதக்கங்கள் வென்றிருப்பதன் மூலம் சமூகவலைத்தளங்களில் ராம்பாய் மீண்டும் வைரலாகி இருக்கிறார். நடிகர் மாதவன், ''விளையாட்டு போட்டியில் 106 வயது முதிய பெண்மணி 3 தங்கம் வென்றார். இது உண்மையான உத்வேகம்'' என்று டுவிட் செய்து பாராட்டி உள்ளார்.